தேடுதல்

Vatican News
காங்கோ ஆயர்கள் காங்கோ ஆயர்கள் 

ஆப்ரிக்கா: 60 ஆண்டுகள் சுதந்திரம், கத்தோலிக்கரின் சவால்கள்

1960ம் ஆண்டில், ஆப்ரிக்க கண்டத்தில், 17 நாடுகள், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்தன. அந்நாடுகள் 2020ம் ஆண்டில், தங்கள் விடுதலையின் அறுபதாம் ஆண்டை நினைவுகூர்கின்றன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆப்ரிக்க கண்டத்தில், 17 நாடுகள், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்து அறுபது ஆண்டுகள் ஆகியுள்ள இக்காலக்கட்டத்தில், அக்கண்டத்தில் வாழ்கின்ற கத்தோலிக்கர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர், Aid to the Church in Need எனப்படும், ஓர் உலகளாவிய பிறரன்பு அமைப்பிடம் (ACN International) பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த ஆப்ரிக்க நாடுகளில் கத்தோலிக்கத் திருஅவையின் பணிகள் குறித்து, இந்த பிறரன்பு அமைப்பிடம் பகிர்ந்துகொண்ட, காங்கோ சனநாயக குடியரசின் Mbuji-Mayi பல்கலைக்கழக பேராசிரியர் அருள்பணி Apollinaire Cibaka Cikongo அவர்கள், இந்த அறுபதாம் ஆண்டு சுதந்திர நிகழ்வை, பல நாடுகள் கொண்டாட விரும்பவில்லை, அதற்கு மாறாக, தங்கள் நாடுகளின் நிலைமை குறித்து சிந்தித்து வருகின்றன என்று கூறினார்.

1960ம் ஆண்டில், 14 நாடுகள் பிரான்சிடமிருந்தும், இரு நாடுகள் பிரித்தானியாவிடமிருந்தும், ஒன்று பெல்ஜியத்திடமிருந்தும் விடுதலை அடைந்தன என்றும், 1960ம் ஆண்டு சனவரி முதல் நாள் காமரூன் நாடும், அதைத் தொடர்ந்து டோகோ, மடகாஸ்கர், சொமாலியா, காங்கோ சனநாயக குடியரசு ஆகிய நாடுகளும் சுதந்திரம் அடைந்தன என்றும், அருள்பணி Apollinaire அவர்கள் கூறினார்.

1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விடுதலையடைந்த பெனின், நைஜர், புர்க்கினா ஃபாசோ, ஐவரி கோஸ்ட், மத்திய ஆப்ரிக்க குடியரசு, காங்கோ குடியரசு (Congo Brazzaville),   காபோன், செனகல், சாட் ஆகிய ஒன்பது நாடுகள், இந்த ஆகஸ்ட் மாதத்தில்,  தங்களின் 60வது சுதந்திர நாளை நினைவுகூர்கின்றன என்றும், அருள்பணி Apollinaire அவர்கள் தெரிவித்தார்.

அந்நாடுகளைத் தொடர்ந்து, நைஜீரியா, மாலி, Mauritania ஆகிய மூன்று ஆப்ரிக்க நாடுகளும், 1960ம் ஆண்டில் விடுதலையடைந்ததன் அறுபதாம் ஆண்டை, 2020ம் ஆண்டில் நினைவுகூர்கின்றன என்றுரைத்த அருள்பணி Apollinaire அவர்கள், தற்போதைய ஆப்ரிக்கா, விடுதலையின் பலன்களை அனுபவிக்காமல், வன்முறைக்குத் திரும்பியுள்ளது என்று கவலை தெரிவித்தார்.

இந்நாடுகளுக்குள்ளும், இந்நாடுகளுக்கு வெளியேயும் இடம்பெறும் பகைமை உணர்வுகள், கத்தோலிக்கத் திருஅவையின் மேய்ப்புப்பணிகள் மற்றும், சமுதாய நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றன என்று, அருள்பணி Apollinaire அவர்கள் எடுத்துரைத்தார்.

தியானம், சேவை, சான்று வாழ்வு, அர்ப்பணம் போன்றவை வழியாக, கிறிஸ்துவுக்கும், அவரது நற்செய்திக்கும் பிரமாணிக்கமாக இருந்து, திருஅவை, சமுதாயத்தில் ஆற்றும் ஆன்மீக மற்றும், சமுதாயப் பணிகள், அதன் உறுப்பினர்களுக்கு மிகுந்த பலனளித்து வருகின்றன என்று, அருள்பணி Apollinaire அவர்கள் அந்த பிறரன்பு அமைப்பிடம் கூறினார். (Zenit)

07 August 2020, 13:29