தேடுதல்

Vatican News
ஜிம்பாப்வே நாட்டின் கோவில் ஒன்று ஜிம்பாப்வே நாட்டின் கோவில் ஒன்று  (ANSA)

ஜிம்பாப்வே நெருக்கடிகள் குறித்து கிறிஸ்தவ தலைவர்கள்

உலக வங்கியின் கணிப்புப்படி, ஜிம்பாப்வே நாட்டில் 2018ம் ஆண்டு 29 விழுக்காடாக இருந்த ஏழ்மை, 2019ல் 34 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தொற்றுநோயால், ஜிம்பாப்வே நாட்டில் மேலும் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து அந்நாட்டு அரசியல் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர், ஜிம்பாப்வே கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஜிம்பாப்வே நாட்டின் ஆளுங்கட்சி பங்குபெற மறுத்த இந்த சந்திப்பில், நாட்டின் 17 கட்சிகளின் தலைவர்களை, ஒருசேரச் சந்தித்த அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் கூட்டமைப்பு, பல ஆண்டுகளாக நாடு சந்தித்துவரும் பிற சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தங்கள் அறிக்கையில் கூறியுள்ளது.

பல ஆண்டுகளாக ஜிம்பாப்வே நாட்டை துன்புறுத்திவரும், பிரச்சினைகள் குறித்து விவாதித்ததுடன், தற்போதைய நலப்பிரச்சினைகள், மருத்துவப் பணியாளர்கள் வேலைநிறுத்தம், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கென ஒதுக்கப்பட்ட நிதி சரியான முறையில் செலவிடப்படாமை போன்றவை குறித்தும் விவாதங்கள் இடம்பெற்றதாக, கிறிஸ்தவத் தலைவர்கள், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

நாட்டில், அரசியலைப்பு சரியாகச் செயல்படுத்தப்படாததால், அதிகாரத்திலிருப்போரே, வன்முறைகளை மேற்கொள்வதும், மக்களைக் கடத்துவதும், திட்டமிட்டு சித்ரவதைகள் செய்வதும் தொடர்ந்து நடைபெறுவதாக, தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர், ஜிம்பாப்வே கிறிஸ்தவத் தலைவர்கள்.

உலக வங்கியின் கணிப்புப்படி, ஜிம்பாப்வே நாட்டில் 2018ம் ஆண்டு, 29 விழுக்காடாக இருந்த ஏழ்மை, 2019ல் 34 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடுமையான வறட்சி காரணமாக, இந்நாட்டில், உணவு உற்பத்தி, மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

22 July 2020, 13:39