தேடுதல்

Vatican News
பெய்ரூட் நகரில் உலக வங்கிக்கு எதிராகப் போராட்டம் பெய்ரூட் நகரில் உலக வங்கிக்கு எதிராகப் போராட்டம்  (ANSA)

லெபனானில் அமைப்புமுறை சீர்திருத்தம் உடனடியாகத் தேவை

லெபனான் நாட்டில், நிலையானத்தன்மை, ஒற்றுமை மற்றும், இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு, அரசு, அமைப்பு முறையில் மாற்றங்களை, உடனடியாகக் கொண்டு வரவேண்டும் - WCC அவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாடு, நவீனகால வரலாற்றில் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவருவது குறித்து, WCC எனப்படும், உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

தற்போது, பொருளாதாரம், சமுதாயம், அரசியல் ஆகிய அனைத்து நிலைகளிலும் நிறைய சவால்களை எதிர்நோக்கிவரும் லெபனான் நாடு, விரைவில் பல முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும், கடந்த ஆண்டில், உள்ளூர் வங்கிகள், மக்கள் பணம் எடுப்பதை வரையறை செய்யத் துவங்கியதிலிருந்து, அந்நாட்டில் நிதி அமைப்பு, கடும் பிரச்சனையில் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், செய்திகள் கூறுகின்றன.

அந்நாட்டில் கொரோனா கொள்ளைநோயால், சுற்றுலாவும், வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளன, இதனால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது மற்றும், வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 50 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், கடந்த மாதங்களில் மின்வெட்டும் அதிகரித்துள்ளது.

லெபனான் நாடு எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சனைகள் குறித்து, மெய்நிகர் கருத்தரங்கில் கலந்தாய்வு செய்த, WCC அவையின் செயல்திட்டக் குழு, அந்நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மிகுந்த கவலை தெரிவித்தது.  

அந்நாட்டில், நிலையானதன்மை, ஒற்றுமை மற்றும், இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்கு, லெபனான் அரசு, அமைப்பு முறையில் மாற்றங்களை, உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று, WCC அவை வலியுறுத்தியுள்ளது.

28 July 2020, 13:39