தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் புகலிடம் தேடுவோர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் புகலிடம் தேடுவோர்  

அரசின் புதிய சட்டங்களுக்கு அமெரிக்க ஆயர்கள் மறுப்பு

புகலிடம் தேடுவோருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதே, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மரபு; அத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவது, சட்டத்திற்குப் புறம்பானது - அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் புகலிடம் தேடுவோருக்கென அந்நாட்டு அரசு வெளியிட்டிருக்கும் புதிய சட்டங்கள் குறித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை தன் மறுப்பைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு, உள்நாட்டு பாதுகாப்புத் துறை, ஜூன் 15ம் தேதி வெளியிட்ட இந்த புதிய சட்டத் திருத்தங்களுக்கு, ஜூலை 15ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை வெளியிட இத்துறை வழங்கிய அனுமதியின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை, தன் கருத்துக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

குடிபெயர்ந்தோர், மற்றும் புகலிடம் தேடுவோர் அனைவர் மீதும், அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்கத் திருஅவை மேய்ப்புப்பணி ஆர்வம் கொண்டுள்ளது என்றும், உலகெங்கிலுமிருந்து வருவோர் அனைவரையும் வரவேற்பது ஒன்றே கிறிஸ்தவ பண்பாடு என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

புகலிடம் தேடுவோருக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதே அமெரிக்க ஐக்கிய நாட்டின் மரபு என்றும், அத்தகைய நிலைப்பாட்டை மாற்றுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் ஆயர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கள் சொந்த நாடுகளில், குற்ற கும்பல்களிடமிருந்தும், குடும்பங்களில் நிலவும் வன்முறைகளிலிருந்தும் தப்பித்து, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அடைக்கலம் தேடும் மனிதர்களை விரட்டியடிப்பது, அவர்களை, மீண்டும் வன்முறையானச் சூழல்களுக்கு உள்ளாக்கும் என்று, ஆயர்கள் சார்பில் அறிக்கை சமர்ப்பித்த குடிபெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர், ஆயர் Mario Dorsonville அவர்கள் கூறியுள்ளார்.

16 July 2020, 14:01