தேடுதல்

Vatican News
மரண தண்டனைக்கு எதிராக மரண தண்டனைக்கு எதிராக  

மனித மாண்புக்கு அதிமுக்கியத்துவம் கொடுப்போம்

அமெரிக்க ஆயர்கள்: மரணதண்டனையும், கருக்கலைத்தலும், பெண்கள் நல புறக்கணிப்பும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மரண தண்டனை என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது, ஏனெனில் அது நற்செய்திக்கும், மனித வாழ்விற்குரிய மதிப்பிற்கும் எதிரானது என தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய அளவில் மரணதண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு மத்திய அரசுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதைத் தொடர்ந்து, தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், 17 ஆண்டுகளுக்குப்பின் மத்திய அரசால் மரணதண்டனை அனுமதிக்கப்பட உள்ளது குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் பேரவையின் உள்நாட்டு நீதி, மற்றும் மனித வளர்சசி அவைத் தலைவர் பேராயர் Paul Coakley அவர்கள், அந்நாட்டு ஆயர்களின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரணதண்டனைக்கு எதிராக ஆயர்கள் தங்கள் குரலை எழுப்புவது, குற்றங்களுக்கு இளகிய மனதுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை குறிக்கவில்லை, மாறாக, மனித வாழ்வின் மாண்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை குறிக்கிறது, எனவும் அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் இதுவரை 22 மாநிலங்கள் மரணதண்டனை சட்டத்தை நீக்கியுள்ளன.
மேலும், பெண்களின் நலன், மற்றும், பாதுகாப்பு குறித்தவைகளில் காட்டப்படவேண்டிய அக்கறையை ஒதுக்கி, கருக்கலைத்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு உச்ச நீதிமன்ற அண்மைய தீர்ப்பு குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஆயர் ஒருவர்.
கருக்கலைத்தல் பெறவிரும்புவோரை மருத்துவமனைக்குள் அனுமதிப்பது குறித்து அமெரிக்க ஐக்கிய நாட்டின் லூயிசியானா மாநில மருத்துவர்களுக்கு இருந்த உரிமையை அண்மைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு நீக்கியுள்ளது குறித்து கவலையை வெளியிட்ட, வாழ்வுக்கு ஆதரவான ஆயர்கள் அவையின் தலைவர் பேராயர் Joseph Naumann அவர்கள், கருக்கலைத்தல் எனும் வியாபாரத்திற்கு இங்கு முக்கியத்துவமே தவிர பெண்களின் நலனுக்கல்ல என்று கூறினார்.
குழந்தையின் வாழ்வதற்குரிய உரிமையை மறுதலித்து, வன்முறை வழிகளால் அவ்வுயிரை பறிக்கும் கருக்கலைத்தல் என்பது, குழந்தைக்கு மட்டுமல்ல, தாயின் நலனுக்கும் எதிரானது என்பதை சுட்டிக்காட்டும் ஆயர் Naumann அவர்கள், மனித வாழ்வின் அடிப்படை உரிமைகளை மீறும் இச்செயலை கத்தோலிக்கர்கள் கடுமையாக கண்டிக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளார்.
 

01 July 2020, 14:41