தேடுதல்

Vatican News
ஹிரோஷிமா நினைவிடம் ஹிரோஷிமா நினைவிடம்  (AFP or licensors)

நீதி, ஒருமைப்பாடு நிறைந்த உலகு அமைக்கப்பட அழைப்பு

இரண்டாம் உலகப்போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும், அமெரிக்க ஐக்கிய நாடு, அணுகுண்டுகளை வீசியது. இதில் ஹிரோஷிமாவில், ஏறத்தாழ 80,000 பேரும், நாகசாகியில் ஏறத்தாழ 40,000 பேரும் உடனடியாக இறந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, மற்றும், நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு அண்மித்துவரும் வேளை, ஜப்பான் நாட்டிற்காகச் செபிக்குமாறும், நீதியும், ஒருமைப்பாடும் நிறைந்த உலகம் அமைக்கப்படுமாறும், அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும், அணுகுண்டுகள் போடப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு, வருகிற ஆகஸ்ட் மாதத்தில்  இடம்பெறுவதை முன்னிட்டு, ஜூலை 13, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்டுள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும், அமைதி பணிக்குழு, போர்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது, இனிமேல் இடம்பெறக்கூடாது என்ற ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த 21ம் நூற்றாண்டில், நாடுகளுக்கிடையிலும், நாடுகள் சாராத குழுக்களுக்கிடையிலும் போர்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாடு அமைப்பு நலிவடைந்து வருகின்றது என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

நீதி மற்றும், அமைதி பணிக்குழு வழியாக, தங்களின் விண்ணப்பத்தை விடுத்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், 75ம் ஆண்டு நிறைவு கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், அணு ஆயுதங்கள் தவிர்க்கப்படுவதில் முன்னேற்றம் இடம்பெற வேண்டுமென்று, அழைப்பு விடுத்துள்ளனர்.

செபத்திற்கு அழைப்பு

1981ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், ஜப்பானுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதற்குப்பின், ஜப்பான் ஆயர்கள், “அமைதிக்காக பத்து நாள் செபங்கள்” என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடித்து வருவதையும், அமெரிக்க ஆயர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 

வருகிற ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் திருப்பலிகள் மற்றும், தனிப்பட்ட செபங்கள் வழியாக, ஜப்பான் நாட்டிற்காகவும், நீதியும், ஒருமைப்பாடும் நிறைந்த உலகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் செபிக்குமாறு, அமெரிக்க கத்தோலிக்கரையும், நன்மனம்கொண்ட அனைவரையும் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும், அமெரிக்க ஐக்கிய நாடு, அணுகுண்டுகளை வீசியது.

இதில், ஹிரோஷிமாவில், ஏறத்தாழ 80,000 பேரும், நாகசாகியில் ஏறத்தாழ 40,000 பேரும் உடனடியாக இறந்தனர். அந்நகரங்கள் பெருமளவில் அழிந்தன. பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர் மற்றும், மாற்றுத்திறனாளிகளாக ஆகினர்.

14 July 2020, 13:49