தேடுதல்

பார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família பசிலிக்கா பார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família பசிலிக்கா 

Sagrada Família பசிலிக்காவில் மருத்துவப் பணியாளருக்கு வரவேற்பு

பார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família என்றழைக்கப்படும் திருக்குடும்பம் பசிலிக்கா, 100 நாள்கள் மூடி வைக்கப்பட்டு, ஜூலை 4, கடந்த சனிக்கிழமையன்று, மக்களின் வருகைக்கென மீண்டும் திறக்கப்பட்டது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற Sagrada Família என்றழைக்கப்படும் திருக்குடும்பம் பசிலிக்கா, 100 நாள்கள் மூடி வைக்கப்பட்டு, ஜூலை 4, கடந்த சனிக்கிழமையன்று, மக்களின் வருகைக்கென மீண்டும் திறக்கப்பட்டது.

கோவிட் 19 தொற்றுக்கிருமியின் பரவலால், மார்ச் 13ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த இந்த பசிலிக்கா, ஜூலை 4ம் தேதி திறக்கப்பட்ட வேளையில், ஸ்பெயின் நாட்டில், மருத்துவ துறையில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டது.

மருத்துவ துறையிலும், ஏனைய முதலுதவித் துறைகளிலும் பணியாற்றிய ஊழியர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஜூலை 4,5 மற்றும் 11,12 ஆகிய இரு வார இறுதி நாள்களில் இந்த பசிலிக்காவை காண்பதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பார்சலோனா பெருநகரில் வாழ்வோர், சிறு குழுக்களாக, இந்த பசிலிக்காவைக் காண, இலவச அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப்பின், மூன்றாவது கட்டமாக, இந்த பசிலிக்கா, வெளிநாட்டு பயணிகளுக்கு திறந்துவிடப்படும் என்று கூறப்படுகிறது.

1883ம் ஆண்டு, இந்த பசிலிக்காவை வடிவமைக்கத் துவங்கிய புகழ்பெற்ற கலைஞர், Antoni Gaudí அவர்கள், 1926ம் ஆண்டு, ஒரு விபத்தில் இறந்ததையடுத்து, இந்த பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் தடைப்பட்டன.

137 ஆண்டுகளுக்குப் பின், பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் தொடர்வதற்குத் தேவையான அதிகாரப்பூர்வ உத்தரவு, இவ்வாண்டு, ஜூன் மாதம் கிடைத்ததையடுத்து, Antoni Gaudí அவர்களது மரணத்தின் முதல் நூற்றாண்டு நினைவு சிறப்பிக்கப்படும் 2026ம் ஆண்டு, இந்த பசிலிக்காவின் கட்டுமானப் பணிகள் முழுமையடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Antoni Gaudí அவர்களின் உடல், இந்த பசிலிக்காவில் புதைக்கப்பட்டுள்ளது என்பதும், அவரை புனிதராக உயர்த்தும் முயற்சிகள், 2003ம் ஆண்டு, வத்திக்கானில் துவக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கன. (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2020, 12:02