தேடுதல்

Vatican News
மோதல்களால் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் மியான்மார் மக்கள் மோதல்களால் நாட்டிற்குள்ளேயே குடிபெயரும் மியான்மார் மக்கள்  (AFP or licensors)

மியான்மாரில் 250,000 பேர் குடிபெயர்ந்தவர்களாக உள்ளனர்

மியான்மார் ஆயர்கள் - கோவிட்-19 நோய் காலத்திலும், மியான்மார் நாட்டில் உள்நாட்டு மோதல்களின் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயர்வது, கவலை தருகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
உள்நாட்டு மோதல்களால் பல ஆண்டுகளாக பாதிப்படைந்துவரும் மியான்மார் நாட்டில், மோதல்களை நிறுத்தவும், அமைதியை விதைக்கவும், அரசும், அரசுசாரா அமைப்புகளும், இணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்து, உலகமே போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையிலும், மியான்மார் நாட்டில் உள்நாட்டு மோதல்களின் காரணமாக பல ஆயிரக்கணக்கானோர் குடிபெயரவேண்டிய நிலை உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிடும் மியான்மார் ஆயர்கள், தொற்றுநோய்க்கெதிராக போராடவேண்டியதை விடுத்து, ஒருவர் ஒருவருக்கெதிராகப் போராடிக்கொண்டிருப்பது குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கிருமியை எதிர்த்து இடம்பெறும் போராட்டத்தில், உள்நாட்டு மோதல்கள் பெரும் தடையாக இருக்கும் எனக் கூறும் ஆயர்கள், Kachin, Shan, Kayin, Rakhine ஆகிய மாநிலங்களில், உள்நாட்டுப்போர் தொடர்வது மிகுந்த கவலை தருவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
கர்தினால் சார்ல்ஸ் போ உட்பட, மியன்மாரின் 16 மறை மாவட்டங்களின் ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கை, சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து உழைப்பதன் வழியாகவே உள்நாட்டு மோதலையும், கொரோனா தொற்றுக்கிருமியையும் வெற்றிக்கொள்ள முடியும் என விண்ணப்பிக்கிறது.
மியான்மார் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் மக்களின் அனைத்து உரிமைகளும் மதிக்கப்பட்ட வேண்டும் எனவும் ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
1948ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து சுதந்திரம் பெற்ற மியான்மார் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களால், 2,50,000 பேர் குடிபெயர்ந்தவர்களாக வாழ்வதாக ஐ.நா. அறிவித்துள்ளது. (UCAN)
 

01 July 2020, 14:48