தேடுதல்

இயேசு சபையின் உலகத்தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா இயேசு சபையின் உலகத்தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா  

கோவிட்-19 காலத்தில் சனநாயகத்தையும் குணப்படுத்தவேண்டும்

இந்த கொள்ளைநோய் காலத்தில் ஏழைகளுக்கு மிக நெருக்கமாய் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். வறியோர் கவனிக்கப்படவில்லையெனில், அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லையெனில், உலகம் நல்லது என்று சொல்லமுடியாது - இயேசு சபையின் உலகத்தலைவர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் அச்சுறுத்தல் நிலவும் காலக்கட்டத்தில், பல்வேறு அரசுகளில் சர்வாதிகாரப்போக்கிற்குச் செல்லும் சோதனை உருவாகியுள்ளது, ஆயினும், உலகளாவிய இயேசு சபையினர், உடன்பிறந்த உணர்வை வலுப்படுத்துவதற்குரிய ஒரு வாய்ப்பாக, இக்காலத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று, இயேசு சபையின் உலகத்தலைவர், அருள்பணி அர்த்தூரோ சோசா (Arturo Sosa) அவர்கள் கூறினார்.

இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் திருநாள், ஜூலை 31, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் செய்தித்துறைக்கு பேட்டியளித்துள்ள, அருள்பணி சோசா அவர்கள், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், உலகளாவிய இயேசு சபையினர் ஆற்றிவரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.  

இந்தக் கொள்ளைநோய் காலத்தில், மருந்தும், உணவும் கிடைக்காமல் துன்புறும் மக்களுக்கு, அவை தாராளமாய்க் கிடைப்பதற்கு, இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும், இயேசு சபையினர் ஆற்றிவரும் பணிகள் குறித்து, தன் பேட்டியில் குறிப்பிட்ட அருள்பணி சோசா அவர்கள், மற்றவரின் தேவைகள் மீது அக்கறை கொள்ளாமல், ஒருவர் தனது தேவைகளை நிறைவேற்ற முடியாது என்று கூறினார்.

சனநாயக நாடுகள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அரசுகள் உட்பட, பல அரசுகள், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், சர்வாதிகாரப் பாதையைத் தேர்ந்துகொள்ளும் பலத்த சோதனைக்கு உள்ளாகியுள்ளன என்றும், பல நாடுகள், தங்களின் புலம்பெயர்ந்தோர் கொள்கைகளை மாற்றுவதற்கு, இந்தக் கொள்ளைநோய் பரவலைப் பயன்படுத்துகின்றன என்றும், நீதியும், மனித உடன்பிறந்த உணர்வும் கொண்ட சிறந்ததோர் உலகை நாம் அமைக்க விரும்பினால், இந்த போக்கு மிகப்பெரும் தவறு என்றும், அருள்பணி சோசா அவர்கள் கூறியுள்ளார்.

நம் அரசியல் நிலைமை மீது, நாம் அக்கறை காட்டாவிட்டால், இந்த கொள்ளைநோய்க்குப் பலியாகும் கூறுகளில், சனநாயகமும் ஒன்றாக இருக்கும் என்றும் எச்சரித்த அருள்பணி சோசா அவர்கள், தொழிலாளரின் வேலை இழப்புகள், நலவாழ்வு சலுகைகள் குறைப்பு போன்ற நிலைகள், இந்த கொள்ளைநோய் நம்மை முன்னோக்கியா அல்லது, பின்நோக்கியா செல்ல வைக்கின்றது என்பதை, திருஅவை சிந்திக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2020, 13:18