தேடுதல்

Vatican News
நேப்பிள்ஸ் நகரில் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி நேப்பிள்ஸ் நகரில் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவி 

கோவிட்-19 சூழலில், குற்றக் கும்பல்களின் புதிய அடிமைமுறை

மற்றவரின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் திரட்டுவது, கடுமையான பாவம். இது மனிதாபிமானமற்றது, கிறிஸ்தவப் பண்பிற்கு முரணானது – தென் இத்தாலிய ஆயர் D’Alise

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள பொருளாதாரச் சரிவைப் பயன்படுத்தி, மாஃபியா குற்றக்கும்பல்கள், சமுதாயங்களில் மறைமுகமாக புதிய அடிமைமுறையை உருவாக்குகின்றன என்று, இத்தாலிய ஆயர் ஒருவர் குறை கூறியுள்ளார்.

தென் இத்தாலியின் கசெர்த்தா மறைமாவட்ட ஆயர் Giovanni D’Alise அவர்கள் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சில குடும்பங்கள், தங்களது கடன்களைச் செலுத்துவதற்காக, பிள்ளைகளை, தங்களிடம் வேலைசெய்யும்படி, உள்ளூர் குற்றக்கும்பல்கள் கட்டாயப்படுத்துகின்றன என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நெருக்கடிநிலையில் குடும்பங்களின் நிலைமை குறித்து, Avvernire என்ற இத்தாலிய தினத்தாளிடம், ஜூலை 12, இஞ்ஞாயிறன்று இவ்வாறு கூறியுள்ள ஆயர் D’Alise அவர்கள், தனது கசெர்த்தா மறைமாவட்டத்தின் அனைத்து வர்த்தகர்கள், அருள்பணியாளர்கள், மற்றும், பொதுநலனுக்காக உழைக்கும் அனைவரும், இந்த புதிய அடிமைமுறை குறித்து எச்சரிக்கையாய் இருக்குமாறு கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

சில உள்ளூர் குற்றக்கும்பல்கள், கொரோனா கொள்ளைநோயால், பொருளாதாரத்தில் சிக்கல்கள் அதிகரித்துவருவதைப் பயன்படுத்தி, துன்புறும் குடும்பங்களுக்கு கடன்கள் வழங்கி, அதற்கு ஈடாக, பிள்ளைகளை வேலைக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்துகின்றன என்றும், ஆயர் D’Alise அவர்கள் கூறியுள்ளார்.

நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு, நம் கண்முன்னே இத்தகைய காரியங்கள் நடைபெறுகின்றன என்றும், நேப்பிள்ஸ் பகுதியில், கம்பானியா மாநிலத்தில் அமைந்துள்ள கசெர்த்தா மறைமாவட்டத்தின் ஆயர் D’Alise அவர்கள் கூறியுள்ளார். 

மற்றவரின் தேவைகளைப் பயன்படுத்தி பணம் திரட்டுவது கடுமையான பாவம் என்றும், இது மனிதப் பண்பிற்கும், கிறிஸ்தவப் பண்பிற்கும் முரணானது என்றும் கூறியுள்ள ஆயர் D’Alise அவர்கள், அநியாய வட்டிக்குக் கடன் கொடுப்பதற்கு எதிராய், கத்தோலிக்கத் திருஅவை தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது என்றும் எடுத்துரைத்தார்.

இதற்கிடையே, கற்பனைக்கெட்டாத முறையில் வட்டிக்குக் கடன்கொடுப்பது, நேப்பிள்ஸ் நகரை மையமாகக்கொண்டு செயல்படும் Camorra என்ற மாஃபியா குற்றக்கும்பலோடு தொடர்புடையது என்று, இத்தாலிய ஊடகங்கள் கூறியுள்ளன. (CNA)

14 July 2020, 13:57