தேடுதல்

Vatican News
மரியாவின் மாசற்ற இதயம் மரியாவின் மாசற்ற இதயம் 

நேர்காணல்: மரியாவின் மாசற்ற இதயத்தின் சிறப்புகள்

மரியாவின் இதயம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயமாக; இறைவனை முழுமையாக நம்பும் இதயமாக தம் உள்ளத்தில் பதித்து இருத்திச் சிந்திக்கின்ற இதயமாக; நமது கூக்குரலை கேட்கும் இதயமாக, நமக்கு உதவிட ஓடிவரும் இதயமாக நற்செய்தி காட்டுகிறது!

மேரி தெரேசா: வத்திக்கான்

அருள்பணி முனைவர் ஜோசப் ஆன்டனி ராஜா அவர்கள், திருஇதயங்கள் சபையைச் சார்ந்தவர். இவர், அச்சபையின் உரோம் தலைமையகத்தில், சபையின் பொருளாளராகப் பணியாற்றுகிறார். திருஇதயங்கள் சபை, ஏறத்தாழ 39 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகிறது. இயேசுவின் தூய்மைமிகு இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சூன் மாதத்தில், இயேசுவின் திருஇதய பக்திப பாடல்களை அடிக்கடி கேட்டுவந்தோம். அருள்பணி ராஜா அவர்களும், கடந்த வாரம், வத்திக்கான் வானொலியில், இயேசுவின் திருஇதயம் பற்றிய தன் சிந்தனைகளை வழங்கினார். அவர் இன்று, அன்னை மரியாவின் மாசற்ற இதயம் பற்றிய தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

அருள்பணி முனைவர் ஜோசப் ஆன்டனி ராஜா SSCC

குரு ஒருவர் பக்தியில், ஞானத்தில் மிகச் சிறந்து விளங்கினாராம். கடவுள் ஒரு நாள் அவரிடம் வந்து, "நான் மனிதர்களோடு கண்ணாமூச்சி விளையாடப் போகிறேன் (கண்ணை கட்டி கண்டுபிடி)! எங்கு ஒளிவது என்று என்னுடைய தூதர்களைக் கேட்டேன். அவர்களில் சிலர் “கடலுக்கு அடியில்” என்றனர், மற்றும் சிலர் “உயர்ந்த மலையில்” என்றனர்! பலர் “நிலவின் மறு பகுதியில்” என்றனர்! வேறு சிலரோ “தொலை தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்றில் ஒளிந்து கொள்ளுங்கள்” என்றனர்! எந்த இடத்தில் ஒளிந்துகொண்டால் மனிதர்களால் என்னை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதை நீர் சொல்லும்" என்று கேட்டாராம்! அதற்கு அந்த குரு, "மனிதரின் இதயத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்! அங்குதான் மனிதர் அவ்வளவு எளிதாய் தேட மாட்டார்; உணர மாட்டார்" என்றாராம்!

கிறிஸ்து இயேசுவில் பிரியமான வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு என் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். ஜூன் மாதம் திரு இருதயங்களுக்கு விழா எடுத்து இறை அன்பில் நாம் மகிழும் மாதம்! இன்று மரியாவின் இதயத்தை பற்றி சிந்திக்க நற்செய்தியை புரட்டி பார்க்க உங்களை அழைக்கிறேன்

மரியாவின் இதயம் மாசற்ற இதயம்

லூக்கா நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 28-30: “வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக்கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.”

கன்னி மரியா அருள்மிகப் பெற்றவர்! கடவுளின் அருளை அடைந்தவர்! கடவுளைத் தாங்கும் ஆலயம்! அதனால்தான் மரியாவின் இதயம் மாசற்ற இதயம்!

மரியாவின் இதயம் இறைதிட்டத்தின் ஏற்கும் இதயம்

யோவான் நற்செய்தி பிரிவு ஒன்று, இறைச்சொற்றொடர்கள் 1, மற்றும் 14ல் வாசிக்கின்றோம்: “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது… வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.”

கடவுள் இவ்வுலகத்தை அன்பு கூர்ந்து தன் ஒரே மகனை இவ்வுலகத்திற்கு அளிக்க நினைத்த போது (யோவா.3,16) மரியாவை தேர்ந்துதெடுத்தார்.  அதற்கு மரியா, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று கேள்வி எழுப்பிய து (லூக்.1,34) வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.” (லூக்.1,35) என்ற இறைத்திடத்தை அறிவிக்கின்றார். அதற்கு மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். (லூக்.1,38)!  மரியாவின் இதயம் இறைதிட்டத்தை ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயம்.

பல நேரங்களில் வாழ்வில் வருகின்ற துன்பங்களை நினைத்து வாடும் நாம்  இறைவனை தூற்றுகின்றோம்! இது இறைவன் திட்டம் என்று ஏற்க மறுக்கின்றோம்! மரியாவின் வழியில் “நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்” (தி.பா.91:2) என்று நம்மால் கூறமுடியுமா?

மரியாவின் இதயம் உதவிட ஓடும் இதயம்

முதிர்ந்த வயதில் கடவுளின் அருளால் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். தம் உறவினராகிய எலிசபெத்து (லூக்.1:36) என்ற வானதூதர் சொல் கேட்டு மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். (லூக்.1:39 -40).

கருவுற இயலாதவர் என்ற அவப்பெயரைக் கேட்டு மனம் வெதும்பி இருக்கும் எலிசபெத்; கன்னியான தான் அருகில் இருந்தால் மேலும் மனம் வாடும் என்று ஒதுங்கி இருந்த மரியா;  இன்று எலிசபெத் கடவுளால் அருள் பெற்றிருக்கிறார்! அவருக்கு இந்த நேரத்தில் உதவவேண்டும் என்று ஓடோடிச் செல்லுகிறார்! மரியாவின் இதயம் பிறரின் தேவையை அறிந்து உதவிட ஓடும் இதயம் என்று படம் பிடித்து காட்டுகிறது லூக்கா நற்செய்தி!

பிறரின் தேவைகள் அறிந்தும் நம் உள்ளத்தை மூடி கொள்கிறோமே ஏன் என்று கேள்வி எழுப்புகிறார் அன்னை மரியா?

மரியாவின் இதயம் பரிந்துரைக்கும் இதயம்

யோவான் நற்செய்தி பிரிவு இரண்டு, இறைச்சொற்றொடர்கள் 3 – 5 பார்க்கின்றோம்: திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா,⁕ அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார்.

திருமண விழாவில் வந்தவர்களை திருப்தியாக கவனித்து அனுப்ப வேண்டும் என்ற பண்பாட்டை காக்க முடியாமல் போய்விடுமோ; அவமானத்தில் தலைகுனியப் போகும் அந்த குடும்பத்தின் நிலை அறிந்த மரியா வேடிக்கை பார்க்காமல் தன்னால் இயன்ற உதவியை செய்ய விரைகிறார்!

அடிப்பட்டு துடிக்கின்ற மக்களை உதவாமல் தங்களையே அவர்களோடு புகைப்படம் (செல்பி) எடுக்கும் நம் மனநிலையை கேள்வி கேட்கின்றது மரியாவின் இதயம்?

மரியாவின் இதயம் ஒரு தாயின் இதயம்

யோவான் நற்செய்தி பிரிவு 19, இறைச்சொற்றொடர்கள் 25-27ல் வாசிக்க கேட்கின்றோம்”  “சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்.”

“நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” (லூக்.1,38)! என்று தன்னையே இறைவனை பெற்றுத்தரும் தாயான மரியா இப்போது இயேசுவால் திருஅவைக்கு தாயாகத் தரப்படுகிறார்!

மேல்மாடியில் சீடர்களோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த அன்னையாக பார்க்கின்றோம் (தி.ப.1,14). துன்பத்தில் துணை இருக்கும் ஒரு தாயாக;  திரு அவையில் வேண்டுதல்களை இறைவனிடம் எடுத்துச் செல்லும் தாயாகப் பார்க்கின்றோம்

மரியாவின் இதயம் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும் இதயமாக; இறைவனை முழுமையாக நம்பும் இதயமாக (எலிசபெத்து வாழ்த்து லூக்.2:45]; மரியா வாழ்வில் நடக்கின்ற நிகழ்ச்சிகளையெல்லாம் (இடையர்களும் வானதூதர்களும் லூக்.2:19]; சிமியோன் வாழ்த்து செய்தி லூக்.2:51) தம் உள்ளத்தில் பதித்து இருத்திச் சிந்திக்கின்ற இதயமாக; நமது கூக்குரலை கேட்கும் இதயமாக, நமக்கு உதவிட ஓடிவரும் இதயமாக நற்செய்தி காட்டுகிறது!  அன்னை மரியாவின் புகழ்பாடும் நாம் அவர் வழியில் பிறர் பணி புரிய இறைவன் அருள்புரிவாராக!

நேர்காணல்: மரியாவின் மாசற்ற இதயத்தின் சிறப்புகள்
02 July 2020, 11:07