தேடுதல்

Vatican News
ஐ.நா. சூழலியல் குழுவில் இணைந்துள்ள இந்திய பழங்குடியின கத்தோலிக்கப் பெண் அர்ச்சனா சொரெங் ஐ.நா. சூழலியல் குழுவில் இணைந்துள்ள இந்திய பழங்குடியின கத்தோலிக்கப் பெண் அர்ச்சனா சொரெங்  

இந்திய பழங்குடியின கத்தோலிக்கப் பெண், ஐ.நா. சூழலியல் குழுவில்

ஒடிசா மாநிலத்தின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அர்ச்சனா சொரெங் அவர்கள், மும்பை டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில், மேலாண்மை கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பவர். ஒடிசா மாநிலத்தின் வசுந்தாராவில் ஆய்வு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் காலநிலை மாற்றம் உருவாக்கியுள்ள பிரச்சனைகளைக் களைவது குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், இந்திய பழங்குடியின கத்தோலிக்க பெண் ஒருவரையும் தேர்ந்தெடுத்துள்ளார்.

கூட்டேரஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள, ஏழு இளம் சூழலியல் தலைவர்களில் ஒருவராக, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, அர்ச்சனா சொரெங் (Archana Soreng) என்ற பழங்குடியின கத்தோலிக்கப் பெண்ணும் உள்ளார்.

ஜூலை 27, இத்திங்களன்று, ஐ..நா. பொதுச்செயலரால் தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய அர்ச்சனா அவர்கள், காலநிலை மாற்றம் குறித்து, நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உட்பட, கவலைப்படும் மக்கள் மற்றும், உலகத் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றும், இந்த தெரிவு, தனக்குக் கிடைத்த பேறு என்றும் கூறினார்.

அர்ச்சனா அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறித்து இந்திய தலத்திருஅவை அதிகாரிகள் பலரும் தங்கள் மகிழ்வையும், பாராட்டையும் வெளியிட்டுள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் பழங்குடியின பணிக்குழுவின் செயலர், அருள்பணி நிக்கொலாஸ் பார்லா அவர்கள் கூறுகையில், நம்மாலும் முடியும் என்பதை, அர்ச்சனா போன்றவர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர் என்று கூறினார்.

ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் நகரில் காதியா பழங்குடியினத்தைச் சேர்ந்த அர்ச்சனா சொரெங் அவர்கள், மும்பை டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்தில், மேலாண்மை கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பவர். ஒடிசா மாநிலத்தின் வசுந்தாராவில் ஆய்வு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

இவர், மாநில மற்றும் தேசிய அளவில் இளைஞர் குழுக்களை ஊக்குவித்து வருகிறார். பழங்குடியின இளைஞர் குழுக்களில் தன்னையும் இணைத்து, அவர்கள், தங்கள் சமுதாயங்களின் பாரம்பரிய அறிவையும் பழக்கவழக்கங்களையும் காப்பாற்றவும், ஆவணங்களைப் பாதுகாக்கவும் ஊக்குவித்து வருகிறார்.  

அர்ச்சனாவும், அவரது குடும்பமும், காலம் காலமாக, இயற்கையோடு தொடர்புகொண்டு, அதை பாதுகாத்து வருகின்றனர் என்றுரைத்த அருள்பணி பார்லா அவர்கள், அர்ச்சனா அவர்கள் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்கு அவர் தகுதியுடையவர் என்று தெரிவித்தார். 

மேலும், இளம் சூழலியல் ஆர்வலர்களைத் தான் தேர்ந்தெடுத்திருப்பது குறித்துப் பேசியுள்ள கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா. அமைப்பில் தீர்மானம் எடுத்தல் மற்றும், திட்டங்களை வகுத்தல் சார்ந்த நடவடிக்கைகளில், மேலும் பல இளம் தலைவர்களை இணைப்பதற்கு ஐ.நா. நிறுவனம் முயற்சித்து வருகின்றது என்று கூறியுள்ளார். (UCAN)

31 July 2020, 13:29