தேடுதல்

Vatican News
புனித அல்போன்சாவின் பரிந்துரையால் குணமடைந்த இளையவர் ஜினில் ஜோசப்  புனித அல்போன்சாவின் பரிந்துரையால் குணமடைந்த இளையவர் ஜினில் ஜோசப்  

ஜூலை 28, புனித அல்போன்சா அவர்களின் திருநாள்

ஜூலை 28ம் தேதி, Bharananganam திருத்தலத்தில் நிகழ்ந்த புனித அல்போன்சா அவர்களின் திருநாள் திருப்பலியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரில், புனிதரின் பரிந்துரையால் குணமடைந்த இளையவர் ஜினில் ஜோசப் அவர்களும் ஒருவர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள Bharananganam நகரில், ஜூலை 28, இச்செவ்வாயன்று, புனித அல்போன்சா அவர்களின் திருநாள் மக்களின் பங்கேற்பு அதிகமின்றி அமைதியாகக் கொண்டாடப்பட்டது.

பாலை மறைமாவட்ட ஆயர் Joseph Kallaranhattu அவர்கள், புனித அல்போன்சா திருத்தலத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், இப்புனிதர், இயேசுவின் பாடுகளோடு தன்னையே இணைத்துக் கொண்டதை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

1910ம் ஆண்டு பிறந்து, பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைந்து, 1946ம் ஆண்டு, ஜூலை 28ம் தேதி, தன் 36வது வயதில் இறையடி சேர்ந்த அல்போன்சா அவர்களை, 2008ம் ஆண்டு, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் புனிதராக உயர்த்தினார்.

ஜினில் ஜோசப் என்ற இரண்டு வயது குழந்தை, அருளாளர் அல்போன்சா அவர்களின் பரிந்துரையால் நலமடைந்த புதுமை, வத்திக்கானில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், அருளாளர் அல்போன்சா அவர்கள் புனிதராக உயர்த்தப்பட்டார்.

ஜூலை 28ம் தேதி, Bharananganam திருத்தலத்தில் நிகழ்ந்த திருப்பலியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரில், புனிதரின் பரிந்துரையால் குணமடைந்த இளையவர் ஜினில் ஜோசப் அவர்களும் ஒருவர்.

தான் இப்புதுமையை அடைந்தபோது தனக்கு அதிகம் விவரம் தெரியாது என்று கூறிய ஜினில் ஜோசப் அவர்கள், பாலை மறைமாவட்டத்தில் அருள்பணியாளராகப் பணியாற்ற தன்னையே தயாரித்து வருவதாகக் கூறினார்.

புனித அல்போன்சா திருநாளன்று அவரது திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலியாற்றுவது தன் கனவுகளில் ஒன்று, ஜினில் ஜோசப் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறினார். (AsiaNews)

29 July 2020, 13:58