தேடுதல்

Vatican News
கேரளாவிலிருந்து வெளியேறும் அஸ்ஸாம் தொழிலாளர்கள் கேரளாவிலிருந்து வெளியேறும் அஸ்ஸாம் தொழிலாளர்கள்   (AFP or licensors)

கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அரசுடன் உயர்மறைமாவட்டம்

கொரோனா நோயாளிகளைப் பராமரிக்க, தலத்திருஅவையின் நிறுவனங்களை அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது, கேரளாவின் உயர் மறைமாவட்டம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கு உதவும் வகையில், தன் நிறுவனங்களையும், வசதிகளையும் அரசு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என வழங்கியுள்ளது, கேரளாவின் உயர்மறைமாவட்டம் ஒன்று.

கேரள மாநிலத்தின் திருவல்லா சீரோ மலங்கரா உயர்மறைமாவட்ட பேராயர் Thomas Mar Koorilos அவர்கள், அம்மாவட்ட தலைமையகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், பொதுநலனுக்கு பயன்படும்வகையில் தங்கள் நிறுவனங்களை பயன்படுத்த அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா கொள்ளைநோய் வேகமாகப் பரவி, ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்டோரை பலிவாங்கிவரும் நிலையில், இந்நோயை எதிர்த்துப் போராட, அரசு நிர்வாகத்திற்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாக பேராயர் Koorilos அவர்கள் உறுதியளித்துள்ளார்.

திருவல்லா நகரிலுள்ள சாந்தி நிலைய வளாகம், மார் அத்தனாசியுஸ் கல்லூரியின் இளையோர் தங்கும் விடுதி, போதனா மையம், பெருந்துறுத்தியிலுள்ள மருத்துவ வளாகம் ஆகியவற்றை, அரசு பயன்படுத்திக்கொள்ள வழங்குவதாக உரைத்த பேராயர் Koorilos அவர்கள், அரசுக்குத் தேவையானால், கோவிட் நோயாளிகளை தங்கவைப்பதற்கென திருமூலபுர சாந்தா மரியா கத்தோலிக்க ஆலயத்தின் அரங்கையும் வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் 1 கோடியே 66 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு, ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 14 இலட்சத்து 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 33 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில், இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, இதுவரை, 6 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். (Fides)

28 July 2020, 13:53