தேடுதல்

Vatican News
இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராட்டம் இந்தியாவில் பெண்ணுரிமைக்காக போராட்டம்  (AFP or licensors)

இந்திய சமுதாயம் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள..

இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினத்தைக் கண்டுபிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை, 4,00,600 பெண் சிசுக்கள் கருவிலேயே கலைக்கப்பட்டுள்ளனர் – ஐ.நா. அறிக்கை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்திய சமுதாயம் பெண்களையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் மதிப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்று, Maher அமைப்பின் இயக்குனரான அருள்சகோதரி லூசி குரியன் அவர்கள் கூறியுள்ளார்.

கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்க்கென, Maher என்ற அமைப்பை உருவாக்கி நடத்திவரும் அருள்சகோதரி குரியன் அவர்கள், இந்தியாவில், பாலியல் பாகுபாடு காரணமாக, கடந்த ஐம்பது ஆண்டுகளில், ஏறத்தாழ 4 கோடியே 58 இலட்சம் பெண்கள் காணாமல்போயுள்ளனர் என்று கூறும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கை ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

“2020ம் ஆண்டின் உலக மக்கள் தொகை நிலவரம்” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மக்கள்தொகை நிதி அமைப்பு (UNFPA), இந்த எண்ணிக்கை, உலக அளவில் காணாமல்போயுள்ள பெண்களின் எண்ணிக்கையில் 32 விழுக்காடு என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து யூக்கா செய்தியிடம் பேசிய, Chavanod திருச்சிலுவை சபையைச் சார்ந்த, அருள்சகோதரி குரியன் அவர்கள், இந்தியாவில் பெண்களின் முக்கியத்துவம் பற்றிய புரிந்துணர்வை உருவாக்குவதும், அது குறித்து மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவருவதும், இந்திய அரசு, மற்றும், பொதுமக்களின் கடமை என்பதை வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தில் மகன்களே குடும்பத்திற்கு வருமானம் கொணர்பவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது என்றும், வரதட்சணை சுமையால் மகள்கள் வருங்காலத்தில் கடனாளியாக்கிவிடுவார்கள் என, பல பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகின்றது என்றும் அச்சகோதரி கூறினார்.

இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே பாலினத்தைக் கண்டுபிடிப்பது தடைசெய்யப்பட்டிருந்தாலும், குடும்பங்களில் மகன்களே அதிகம் விரும்பப்படுவதால், 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டுவரை, 4,00,600 பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்பட்டுள்ளனர் என்று, ஓர் அறிக்கை கூறுகிறது. (UCAN)

03 July 2020, 13:31