தேடுதல்

Vatican News
இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள் இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள்  (ANSA)

நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு..

இந்தியாவில், 1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், தொழிலாளர்களின் கூலி, வேலை நேரம், நலவாழ்வு போன்றவற்றிற்கு உறுதி அளிக்கின்றது, ஆயினும், இந்த கொள்ளைநோய் காலத்தில் இந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்களை அனைவரும் அறிந்தே உள்ளோம் - அருள்பணி ஜெய்சன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், கோவிட்-19 கொள்ளைநோய்க்கு அதிகம் பலியாகும்வேளை, சரியான சட்டங்கள் வழியாக, அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று, இந்திய ஆயர் பேரவையின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஜெய்சன் வடச்சேரி (Jaison Vadassery) அவர்கள், இந்தியாவில், வெளிமாநிலங்களில் குடிபெயர்ந்துள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி, 1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.

1979ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம், தொழிலாளர்களின் கூலி, வேலை நேரம், நலவாழ்வு போன்றவற்றிற்கு உறுதி அளிக்கின்றது, ஆயினும், இந்த கொள்ளைநோய் காலத்தில் இந்த தொழிலாளர்கள் எதிர்கொண்ட துன்பங்களை அனைவரும் அறிந்தேயுள்ளோம் என்றும், அருள்பணி ஜெய்சன் அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்

இந்த தொழிலாளர்களில் பலர், தங்களின் சொந்த கிராமங்களில் கோவிட்-19 விதிமுறைகளின்படி தங்கியிருந்தபின், நகரங்களுக்குத் திரும்பிவருகின்றனர் என்று கூறியுள்ள அருள்பணி ஜெய்சன் அவர்கள், இம்மக்களின் நிலை, உண்மையிலேயே, மனிதாபிமான நெருக்கடியாக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில், ஔரங்கபாத் மாவட்டத்தில் குறைந்தது 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறந்தனர் என்பதையும், மேலும், நாடெங்கும் சாலை விபத்துகளில் நூறு பேர் இறந்துள்ளனர் என்பதையும், அருள்பணி ஜெய்சன் அவர்கள் குறிப்பிட்டார்.

இந்த தொழிலாளர்களில் பலர், பீகார், சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், ஒடிசா, இராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றுரைத்த அருள்பணி ஜெய்சன் அவர்கள், இம்மக்கள் எவ்வித சமுதாய அல்லது, சட்டமுறைப்படியான பாதுகாப்பு இல்லாமல், ஆபத்தான சூழல்களில் வேலை செய்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார். 

25 July 2020, 13:30