தேடுதல்

Vatican News
துருக்கி நாட்டில் Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம் துருக்கி நாட்டில் Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம்  (ANSA)

Hagia Sophia குறித்த தீர்மானம் திரும்பப் பெறுமாறு WCC மன்றம்

ஏறத்தாழ 350 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பான WCC மன்றம், அரசுத்தலைவர் எர்டோகான் அவர்களுக்கு எழுதியுள்ள மடலில், Hagia Sophia குறித்த அரசுத்தலைவரின் தீர்மானம் பிரிவினையை விதைக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், துருக்கி நாட்டில் Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம், மசூதியாக மாற்றப்பட்டுள்ளது குறித்து, அந்நாட்டு அரசுத்தலைவர் தய்யிப் எர்டோகான் (Recep Tayyip Erdogan) அவர்களுக்கு மடல் எழுதியுள்ள WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், அந்த தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்தான்புல் நகரில், அருங்காட்சியமாக, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்துவந்த Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம், மசூதியாக மாற்றப்பட்டு, ஜூலை 24ம் தேதி முஸ்லிம்களின் தொழுகைக்குத் திறந்துவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை முன்னிட்டு, WCC மன்றத்தின் இடைக்காலப் பொதுச்செயலர் Ioan Sauca அவர்கள், அரசுத்தலைவர் எர்டோகான் அவர்களுக்கு, ஜூலை 12, இஞ்ஞாயிறன்று எழுதியுள்ள மடலில், அரசுத்தலைவரின் இந்த தீர்மானம், பிரிவினையை விதைக்கும் என்றும், இது மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தீர்மானம், நிச்சயமற்றதன்மைகள், சந்தேகங்கள் மற்றும், நம்பிக்கையின்மையை நிச்சயமாக உருவாக்கும் என்றும், பல்வேறு மதத்தவர் மத்தியில் உரையாடலையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்த மேற்கொள்ளும், தங்களின் அனைத்து முயற்சிகளையும் வலுவிழக்கச் செய்யும் என்றும், Sauca அவர்கள், அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.

WCC மன்றம், ஏறத்தாழ 350 கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பாகும். இதில் 50 கோடிக்கு அதிகமான கிறிஸ்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்,

1500 ஆண்டுகளுக்குமுன், உரோமைப் பேரரசர் முதலாம் ஜூஸ்தீனியன் காலத்தில் கட்டப்பட்ட, இறைஞானம் எனப்படும் Hagia Sophia கிறிஸ்தவப் பேராலயம், 1453ம் ஆண்டில் ஒட்டமான்கள் கைப்பற்றியபின், மசூதியாக மாற்றப்பட்டது.

துருக்கியை, சமயசார்பற்ற நாடாக உருவாக்கியவரும், நவீன துருக்கி நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவருமான Mustafa Kemal Ataturk அவர்கள், Hagia Sophiaவை அருங்காட்சியகமாக மாற்றினார். அதன்பின்னர், அங்கு, மதம்சார்ந்த வழிபாடுகள் தடைசெய்யப்பட்டிருந்தன. (BBC)

13 July 2020, 14:28