தேடுதல்

Vatican News
"நம்பிக்கைக்கும், நாட்டுக்கும் மறைசாட்சிகள்" என்ற புதிய திரைப்படத்தின் விளம்பரம் "நம்பிக்கைக்கும், நாட்டுக்கும் மறைசாட்சிகள்" என்ற புதிய திரைப்படத்தின் விளம்பரம் 

"நம்பிக்கைக்கும், நாட்டுக்கும் மறைசாட்சிகள்" – புதிய திரைப்படம்

இஸ்லாமியத் தீவிரவாத குழுவால், லிபியா கடற்கரையில், தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளையோரை மையப்படுத்தி, "நம்பிக்கைக்கும், நாட்டுக்கும் மறைசாட்சிகள்" என்ற தலைப்பில், திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

2015ம் ஆண்டு, இஸ்லாமியத் தீவிரவாத குழுவால், லிபியா கடற்கரையில், தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்ட இளையோரை மையப்படுத்தி, "நம்பிக்கைக்கும், நாட்டுக்கும் மறைசாட்சிகள்" என்ற தலைப்பில், திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது என்று, பீதேஸ் செய்தி கூறுகிறது.

எகிப்து நாட்டின் காப்டிக் வழிபாட்டு முறையைச் சேர்ந்த 20 இளையோரும், ஆப்ரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த ஓர் இளைஞரும், லிபியா கடற்கரையில், தலைவெட்டப்பட்ட நிகழ்வு, 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ISIS என்றழைக்கப்படும் தீவிரவாத குழுவால், ஒரு காணொளி வடிவில் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று உருவாக்கும் திட்டம், இவ்வாண்டு, சனவரி மாதம் துவங்கவிருந்த நிலையில், கொரோனா தொற்றுநோய் நெருக்கடியால், இத்திட்டம், தற்போது துவங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறை ஆயர் Anba Pavnotios அவர்களின் மேற்பார்வையின் கீழ் துவங்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, இரண்டாம் Tawadros அவர்கள் தன் ஆசீரை வழங்கியுள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த Yussef Nabil என்ற திரைப்பட இயக்குனரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டு முறையின் Samalut மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டு, பிப்ரவரி 15ம் தேதி, ISIS தீவிரவாதிகள் இந்த படுகொலையின் காணொளியை வெளியிட்டதையடுத்து, இந்த 21 இளையோரையும், முதுபெரும் தந்தை Tawadros அவர்கள், மறைசாட்சிகள் என்று அறிவித்து, அவர்களது திருநாளை, பிப்ரவரி 15ம் தேதி கடைபிடிக்க உத்தரவு பிறப்பித்தார். (Fides)

09 July 2020, 13:33