தேடுதல்

Vatican News
சிரியாவில் தன்னார்வலர்கள் சிரியாவில் தன்னார்வலர்கள்  (ANSA)

மனிதாபிமான நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு உடனடி உதவி தேவை

ஏமன், சிரியா, சொமாலியா, தென் சூடான், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும், பங்களாதேஷ் நாட்டின் Cox’s Bazar முகாம்களிலுள்ள மியான்மார் புலம்பெயர்ந்த மக்களுக்கும் உடனடி உதவிகள் தேவை - CAFOD

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஏற்கனவே போர்கள் மற்றும் நிலையற்றதன்மைகளை எதிர்நோக்கும் நாடுகள், கொரோனா கொள்ளைநோய் பரவலால் மேலும் நெருக்கடிநிலைகளைச் சந்திக்கும்வேளை, அந்நாடுகளுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படவேண்டும் என்று, பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும், CAFOD எனப்படும் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

ஏமன், சிரியா, சொமாலியா, தென் சூடான், காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கும், பங்களாதேஷ் நாட்டின் Cox’s Bazar முகாம்களிலுள்ள மியான்மார் புலம்பெயர்ந்த மக்களுக்கும், உதவிகள் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளதையும் CAFOD அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சிரியாவில் கொள்ளைநோய் பரவுவதற்குமுன், 1 கோடியே, 20 இலட்சத்திற்கு அதிகமானோர், நாட்டைவிட்டு வெளியேறி இருந்தனர், 1 கோடியே 10 இலட்சம் பேருக்கு, மனிதாபிமான உதவிகள் தேவைப்பட்டன, என்றும், தற்போதைய கொள்ளைநோய் நெருக்கடியால், சிரியாவின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்றும், CAFOD அமைப்பு கூறியுள்ளது.

போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, இப்போதைய கொள்ளைநோய் பரவலாலும் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டிற்கு 2012ம் ஆண்டிலிருந்து உதவிகளை வழங்கிவரும், CAFOD அமைப்பு, பிரித்தானியாவிலுள்ள பேரிடர் நிவாரண (DEC) மையத்துடனும் இணைந்து பணியாற்றி வருகின்றது.

பசிக்கொடுமை பற்றி ஐ.நா.

மேலும், ஐ.நா. நிறுவனத்தின் உலக உணவு திட்ட அமைப்பும் (WFP), ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை அமைப்பும் (FAO) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகைத் தாக்கியிருக்கும் கோவிட்-19 கொள்ளைநோயால், வருகிற மாதங்களில், 25 நாடுகள் கடும் பசிக்கொடுமையை எதிர்நோக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் மட்டுமல்லாமல், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதி நாடுகளும், மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளும், உணவு பாதுகாப்பின்மையை எதிர்நோக்கும் என்று, அவ்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. (UN)

18 July 2020, 13:11