தேடுதல்

Vatican News
ஜார்க்ண்ட் தலத்திருஅவை, நிலக்கரி சுரங்கம் தொடர்பான அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு ஜார்க்ண்ட் தலத்திருஅவை, நிலக்கரி சுரங்கம் தொடர்பான அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு 

நிலக்கரி கனிமவளப் பகுதி ஏலத்திற்கு விடப்படுவதற்கு எதிர்ப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியினர், வேளாண்மை மற்றும் வனப்பகுதியையே நம்பியுள்ளனர். நிலக்கரியை வெட்டியெடுக்க, நிலம் ஒதுக்குவது, வனத்தின் பெரும்பகுதியை அழிக்கும் மற்றும், பழங்குடியினரைப் புலம்பெயரச் செய்யும் - தலத்திருஅவை

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள நிலக்கரி கனிமவளப் பகுதிகளை,  சுரங்கத்தொழில் வர்த்தகர்களுக்கு ஏலத்திற்கு விடும் இந்திய நடுவண் அரசின் திட்டத்திற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளது, தலத்திருஅவை.

அரசின் இந்நடவடிக்கையால், பல்லுயிர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டு, அவை இடம்பெயர வழியமைக்கும் என்று எச்சரித்துள்ள திருஅவைத் தலைவர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பழங்குடியினர், வேளாண்மை மற்றும் வனப்பகுதியையே நம்பியுள்ளனர் என்றும், நிலக்கரியை வெட்டியெடுக்க, நிலம் ஒதுக்குவது, வனத்தின் பெரும்பகுதியை அழிக்கும், மற்றும், பழங்குடியினரைப் புலம்பெயரச் செய்யும் என்றும் கூறியுள்ளனர்.

நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்கு, பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை அழிக்காமல், வேறு வழிகளில், நடுவண் அரசு முயற்சி செய்யலாம் என்று  கூறியுள்ள, புது டெல்லியிலுள்ள இயேசு சபையினரின் இந்திய சமுதாய நிறுவனத்தின் பழங்குடியினர் துறையின் தலைவரான அருள்பணி வின்சென்ட் எக்கா அவர்கள், அரசு, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குமா என்ற சந்தேகமும் எழுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.   

இந்திய நடுவண் அரசின் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன், தலத்திருஅவையும் இணைந்துள்ளது என்று யூக்கா செய்தி கூறுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், சுரங்கத்தொழில்கள் ஏற்படுத்தும் எதிர்விளைவுகள் குறித்து அக்கறை காட்டப்படாமலேயே, அவை பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகின்றன என்றும், அருள்பணி எக்கா அவர்கள் கூறினார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கடந்த ஜூன் 18ம் தேதி காணொளி வழியாக நடத்திய கருத்தரங்கு ஒன்றில், நிலக்கரி உள்ள 41 பகுதிகள், வர்த்தக நோக்கத்திற்காக ஏலத்திற்கு விடப்படும் என்று அறிவித்தார் எனவும், இந்த 41 பகுதிகளில் 9, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ளன எனவும் யூக்கா செய்தி கூறுகிறது.

சட்டீஸ்கார், மத்திய பிரதேசம், மகராஷ்ட்ரா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நிலக்கரி கனிமவளங்கள் அதிகமாக உள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ளன. (UCAN)

17 July 2020, 12:51