தேடுதல்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-32

தனது பெயரோடு "முதலாம்" என்பதை இணைத்துக்கொண்ட முதல் திருத்தந்தை, புன்னகை திருத்தந்தை என அழைக்கப்படும், திருத்தந்தை லூச்சியானி அவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்-4

“ஒருவர், மிகச் சிறந்த ஒளியில் பொருள்களைப் பார்ப்பதற்கு முயற்சிப்பதை வைத்து, அவர், கிறிஸ்தவர் என்பது அறிந்து கொள்ளப்படவேண்டும்.  எனவே, கிறிஸ்தவர் என்பவர், மகிழ்வாக இருப்பவர், மகிழ்வைப் பரப்புவர் என்று அர்த்தமாகும். புனித பிலிப்நேரி சொன்னதுபோல், கடுகடுப்பான முகங்கள், விண்ணகத்தின் மகிழ்வான இல்லத்தால் அமைக்கப்படவில்லை!” இவ்வாறு தனது மடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், தனது கூற்றிற்கேற்ப, எப்போதும் புன்னகை ததும்பும் முகத்தோடு இருந்தவர். புன்னகை திருத்தந்தை, திருத்தந்தை லூச்சியானி என அழைக்கப்படும் இவர், உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை மற்றும், வத்திக்கான் நாட்டின் தலைவராக, 33 நாள்களே பணியாற்றி இருந்தாலும், உலகினர் அனைவர் மனங்களிலும், என்றுமே அழியாத இடம்பிடித்திருப்பவர். இவர் ஏழைகளின் பிரியர் எனவும் போற்றப்படுகிறார். இவரின் இந்தப் பண்பிற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம்.

ஏழைகளின் பிரியர்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன், இத்தாலி நாட்டின் வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றினார். கர்தினால் அல்பினோ லூச்சியானியாகிய அவர், அக்காலக்கட்டத்தில், ஏழைகள், தங்களின் திருமண வாழ்விலும், பாலியல் மற்றும், நிதி சார்ந்த விவகாரங்களிலும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்கு உதவியாக, குடும்ப உளவியல் மையங்களை உருவாக்கினார். மாற்றுத்திறன்கொண்ட சிறார்க்கு உதவுவதற்கென, ஆலயங்களில் இருந்த தங்கப்பொருள்களை விற்குமாறு இவர் கூறினார். திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், தனக்குக் கொடுத்த தங்கச் சங்கிலி மற்றும், தங்கச் சிலுவையை விற்று, அந்த பணத்தை அச்சிறாரின் நலனுக்குப் பயன்படுத்தச் சொன்னார். தனது வெனிஸ் உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களும், தங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள்களையும், இதே கருத்துக்காக விற்குமாறும், அவர்கள் எளிமையும் தாழ்மையும் நிறைந்த வாழ்வு வாழுமாறும் கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள் தூண்டினார்,

கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள், அருள்பணியாளர்கள், தொழிற்சாலைகளிலும், வயல்களிலும் பொதுநிலையினரோடு சேர்ந்து வேலைசெய்வதை எதிர்த்தார். தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதையும், தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்துவதையும் இவர் குறை கூறினார். திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இறைவனடி சேர்ந்தபோது, அவரின் அடக்கச் சடங்கிற்குச் சென்ற கர்தினால் லூச்சியானி அவர்கள், கூட்டத்தோடு கூட்டமாக கலந்துநின்று, அந்த திருத்தந்தையின் உடலைப் பார்ப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் தன்னை யாரும் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று நினைத்திருந்த அவரை, அதிகாரிகள் இனம்கண்டு, அவரை மற்றோர் இடத்திற்கு அழைத்துச் சென்று செபிப்பதற்கு வசதி செய்து கொடுத்தனராம். அவ்வளவு எளிமையான கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கான்கிளேவ் எனப்படும் கர்தினால்கள் அவையில் கலந்துகொள்வதற்காக உரோம் வந்தார். அச்சமயத்தில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் போன்று, திருப்பீட தலைமையகத்தில் பணியாற்றிய ஒருவரை, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுப்பதற்கு, கர்தினால்கள் அவையில் பலர் விரும்பவில்லையாம். அதற்கு மாறாக, திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் போன்று, மேய்ப்புப்பணியாற்றும் எளிமையும், இனிமையும் நிறைந்த ஒருவரை, புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க அவர்கள் விரும்பினராம்.

புதிய திருத்தந்தை தேர்வு

1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தொடங்கிய கான்கிளேவ் அவையில், அதற்கு அடுத்த நாள், கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், கர்தினால் Jean-Marie Villot அவர்கள், இந்த தேர்தல் முடிவை ஏற்கின்றீர்களா என்று அவரிடம் கேட்கையில், "நீங்கள் செய்துள்ள இந்தச் செயலுக்கு கடவுள் உங்களை மன்னிப்பாராக" என்று சொல்லி, அந்த முடிவை ஏற்றுக்கொண்டாராம். அந்த தேர்தலுக்குப்பின் ஒவ்வொரு கர்தினால்களாக வந்து அவருக்கு மரியாதை செலுத்தினர். பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரான கர்தினால் ஹைமே சின் அவர்கள் மரியாதை செலுத்த அவரிடம் வந்தபோது, "நீங்கள் ஓர் இறைவாக்கினர், ஆயினும், எனது தலைமைப்பணிக்காலம் குறுகிய ஒன்றாக இருக்கும்" என்று சொன்னாராம், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல். ஏனெனில், கர்தினால் சின் அவர்கள், அவரிடம், "நீங்கள்தான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்" என்று ஏற்கனவே கூறியிருந்தாராம்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் புதிய திருத்தந்தையை காண்பதற்கு ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் நடு மாடத்திலிருந்து இவரின் தேர்தல் முடிவை அறிவித்த கர்தினால் Pericle Felici அவர்கள், வெனிஸ் முதுபெரும்தந்தை கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், அவர் முதலாம் யோவான் பவுல் என்ற பெயரைத் தெரிவுசெய்துள்ளார் என்று அறிவித்தார். ஒரு திருத்தந்தை, இரு பெயர்களைத் தெரிவு செய்தது, திருத்தந்தையர் வரலாற்றில் அதுவே முதன்முறையாகும். தனக்கு முந்தைய இரு திருத்தந்தையர்களான, திருத்தந்தை 23ம் யோவான், திருத்தந்தை 6ம் பவுல் ஆகிய இருவர் மீது தான் கொண்டிருக்கும் நன்றிகலந்த நன்மதிப்பே இதற்கு காரணம் என்று, இந்த பெயரைத் தெரிவு செய்ததற்கான காரணத்தை அவர் பின்னாளில் விளக்கியுள்ளார். தனது பெயரோடு "முதலாம்" என்பதை இணைத்துக்கொண்ட முதல் திருத்தந்தையுமாவார், திருத்தந்தை லூச்சியானி. பிறகு ஒரு நாள், இவர், இந்த தேர்தல் பற்றி தனது சகோதரர் எத்வார்தோ லூச்சியானி அவர்களிடம் கூறுகையில், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள் மீது தான் கொண்டிருந்த நன்மதிப்பால், முதலில் திருத்தந்தை 13ம் பயஸ் என்ற பெயரையே தெரிவு செய்ய நினைத்தேன். ஆனால் திருஅவையின் பழமைவிரும்பிகளுக்கு அஞ்சி அந்த எண்ணத்தை கைவிட்டேன் என்று கூறினாராம்.

புதிய திருத்தந்தை பற்றி..

உலகில் எந்த ஒரு தலைமைத்துவத்திற்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், அவரைப் பற்றி நேர்மறையான மற்றும், எதிர்மறையான விமர்சனங்கள் சொல்லப்படுவது வழக்கம். திருஅவையிலும் அது விதிவிலக்கு அல்ல. திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாங்கள் "கடவுளின் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று, சில கர்தினால்கள் கூறியுள்ளனர். அர்ஜென்டீனா நாட்டு கர்தினால் Eduardo Francisco Pironio அவர்கள் கூறுகையில், "நன்னெறி புதுமை ஒன்றுக்கு நாங்கள் சாட்சிகள்" என்று கூறியுள்ளார். புதிய திருத்தந்தை பற்றி, கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள் கூறுகையில், "புதிய திருத்தந்தை, உலகின் இருளில், கடவுளின் அன்பு ஒளிரும் சுடராகவும், கடவுளின் மாபெரும் கொடையாகவும்  விளங்குவார்" என்று கூறியுள்ளார். இந்த தேர்தல் முடிவு குறித்து, பிரித்தானிய கர்தினால் Basil Hume அவர்கள் கூறுகையில், "ஒருமுறை இது நடந்துவிட்டால், அது முற்றிலும் சரியானதாகவேத் தெரிகின்றது. நாங்கள் அவரின் பெயரை தாள்களில் எழுதியபோது, எம் கரங்கள் ஏதோ ஒன்றால் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருந்ததாக உணர்ந்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1978ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள் புதிய திருத்தந்தையாக திருப்பொழிவு செய்யப்படும் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் பங்குபெற்ற, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் பிரதிநிதி லெனின்கிராட் நகரின் Nikodim (Rotov) பேராயர், இந்நிகழ்வு நடைபெற்று முடிந்தவுடன், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். உடனடியாக, திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அவரிடம் சென்று செபித்தார். இவ்வாறு திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் அவர்கள், அனைவர் மீதும் அன்பும், இரக்கமும் கொண்டு விளங்கினார். தனது பேச்சால் மற்றவரை மகிழ்விப்பவர் இவர். “ஒரு நாள் நான் திருத்தந்தையாவேன் என்று, யாராவது என்னிடம் சொல்லியிருந்தால், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்திருப்பேன்” என்று சொல்லி, மற்றவரை மகிழ வைத்திருக்கிறார், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல். இவர் தனது தலைமைப்பணிக் காலத்தில் நிறைவேற்றுவதற்கென, ஆறு அம்சத் திட்டங்களை வகுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் வழியாக, திருஅவையை இவர் புதுப்பிக்க விரும்பியது இவரின் முதல் திட்டமாக இருந்துள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2020, 11:44