தேடுதல்

Vatican News
திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் 

சாம்பலில் பூத்த சரித்திரம்: 20ம் நூற்றாண்டு திருத்தந்தையர்-31

மாற்றுத்திறன்கொண்ட சிறார்க்கு உதவுவதற்கு நிதி திரட்டுவதற்கென, 1976ம் ஆண்டில், கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களால் தனக்கு வழங்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும், தங்கச் சிலுவையை விற்றார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் யோவான் பவுல்-3

உலகளாவிய கத்தோலிக்கத் திருஅவை மற்றும், வத்திக்கான் நாட்டின் தலைவராக, 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி முதல், 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதிவரை, 33 நாள்களே, பணியாற்றியவர், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல். இத்தாலி நாட்டின் வடக்கேயுள்ள வெனெத்தோ மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் பிறந்த, அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயரைக்கொண்ட இவர், பத்து வயதிலே அருள்பணித்துவ வாழ்வு மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். 11வது வயதில் இளம் அருள்பணித்துவ இல்லத்தில் பயற்சியைத் துவங்கி, 1934ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அருள்பணி அல்பினோ லூச்சியானி அவர்கள், Canale d’Agordo (Forno de Canale)  என்ற தனது சொந்த ஊரில் பங்குத்தந்தையாக, மறைப்பணியைத் துவக்கினார். பின்னர், 1937ம் ஆண்டில் பெல்லூனோ அருள்பணித்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், உதவித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் அச்சமயத்தில் கோட்பாட்டு மற்றும், நன்னெறி இறையியல், திருஅவை சட்டம், திருக்கலைகள் ஆகிய பாடங்களைக் கற்பித்தார். 1941ம் ஆண்டில் உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்ட ஆய்வுகளைத் துவக்கினார். அச்சமயத்தில் இவர் பெல்லூனோ அருள்பணித்துவ கல்லூரியில் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார். எனவே குறைந்தது ஓராண்டுதான் பல்கலைக்கழகத்தில் அவரால் சேர்ந்து படிக்க முடிந்தது. 1941ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் வழங்கிய சிறப்பு அனுமதியின்பேரில், பெல்லூனோவில் பணியாற்றிக்கொண்டே, 1947ம் ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வுகளை முடித்து, அந்த பட்டத்தையும் பெற்றார். “அந்தோனியோ ரோஸ்மினியின் (Antonio Rosmini) கருத்தியலின்படி, மனித ஆன்மா” என்ற தலைப்பில், இவர் தனது முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்.

ஆயர் அல்பினோ லூச்சியானி

அருள்பணி அல்பினோ லூச்சியானி அவர்கள், 1947ம் ஆண்டில் பெல்லூனோ மறைமாவட்ட சான்சிலராகவும், 1954ம் ஆண்டில் அதன் முதன்மைக் குருவாகவும் நியமிக்கப்பட்டார். இவர் பலமுறை ஆயர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், இவரின் உடல்நலம் மற்றும், உடல் தோற்றத்தால் அது வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. 1949ம் ஆண்டில், “சிறுதுணுக்குகளில் மறைக்கல்வி” என்ற தலைப்பில், இவர் ஒரு நூலை வெளியிட்டார். இவர் வெளியிட்ட இந்த முதல் நூல், கிறிஸ்தவ நம்பிக்கையின் உண்மைகளை மிக எளியமுறையில் விளக்கியது. திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், அருள்பணி அல்பினோ லூச்சியானி அவர்களை, 1958ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, வித்தோரியோ வெனத்தோ (Vittorio Veneto) மறைமாவட்ட ஆயராக நியமித்து, அவரே, அவருக்கு ஆயர் திருநிலைப்பாட்டையும் நிறைவேற்றினார். அருள்பணி லூச்சியானி அவர்கள், தாழ்ச்சி (Humilitas) என்ற விருதுவாக்குடன், 1959ம் ஆண்டு சனவரி மாதம் 11ம் தேதி, தன் ஆயர் பணியைத் தொடங்கினார். "ஆயர் என்பவர், ஆசிரியராகவும், பணியாளராகவும் இருக்கவேண்டியவர்". அவ்வாறு வாழ்வதற்கு, தான் முயற்சி செய்வதாக, ஆயர் லூச்சியானி அவர்கள், தனது மறைமாவட்ட விசுவாசிகளிடம், அறிவித்தார். 1962ம் ஆண்டு முதல், 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் அனைத்து அமர்வுகளிலும், இவர் ஆயராகப் பங்கேற்றார்.

ஆயர் லூச்சியானி அவர்கள், 1962ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி வெளியிட்ட மேய்ப்புப்பணி சுற்றறிக்கையில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நடைமுறைகள், அதன் நோக்கம், அதன் கோட்பாட்டு இயல் போன்றவை குறித்த விழிப்புணர்வை உருவாக்கினார். இவர், 1965ம் ஆண்டுக்கும், 1969ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், ஒரு பெரிய பிரச்சனையை எதிர்நோக்கினார். அதாவது இவரது மறைமாவட்டத்தைச் சார்ந்த Montaner நகரின் குடிமக்களில் ஏறத்தாழ எல்லாரும் தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை மறுதலித்து, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையில் இணைவதற்குத் தீர்மானித்தனர். 1966ம் ஆண்டில், ஆயர் லூச்சியானி அவர்கள், இந்த நகர கத்தோலிக்கரின் விருப்பத்திற்கு மாறாக, John Gava என்ற அருள்பணியாளரை, புதிய பங்குத் தந்தையாக நியமித்ததே இதற்குக் காரணம். மேலும், ஆயருடன் ஓர் இணக்கத்திற்கு வர விரும்பிய அந்த மக்கள், தாங்கள் விரும்பிய அருள்பணியாளரை உதவி பங்குத்தந்தையாக நியமிக்கவேண்டும் என்றும் ஆயரிடம் வலியுறுத்தினர். ஆனால் அவர், இந்த சிறிய கிராமத்திற்கு ஒரேயொரு அருள்பணியாளர் மட்டும்போதும் என்று கூறினார். பின்னர் அந்த மக்கள், ஆயரிடம் புதிய புதிய அருள்பணியாளர்களைப் பரிந்துரைத்தனர். எதற்கும் வளைந்துகொடுக்காத ஆயர் லூச்சியானி அவர்கள், காவல்துறையின் பாதுகாவலுடன், Montaner ஆலயத்தினின்று திருநற்கருணையை எடுத்துக்கொண்டு, ஆலயத்தை ஆசீர்வதிக்காமலே சென்றுவிட்டார். அடுத்து அந்த கிராம மக்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதற்காகவும் காத்திருந்தார், ஆயர் லூச்சியானி.

1971ம் ஆண்டில் ஆயர்கள் மாமன்றம்

ஆயர் லூச்சியானி அவர்கள், 1969ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி, வெனிஸ் உயர்மறைமாவட்டத்தின் முதுபெரும்தந்தையாக, புனித திருத்தந்தை 6ம் பவுல் அவர்களால் நியமிக்கப்பட்டார். 1970ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அந்த உயர்மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்றார் அவர். அதே மாதத்தில், அவர் அதற்குமுன் ஆயராகப் பணியாற்றிய வித்தோரியோ வெனெத்தோ நகரின் கவுர குடிமகன் என்ற சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தை அல்பினோ லூச்சியானி அவர்கள்,1971ம் ஆண்டில் திருத்தந்தையின் அழைப்பின்பேரில், ஆயர்கள் மாமன்றத்தில் பங்குபெற்றார். அச்சமயத்தில் அவர் அனைத்து ஆயர்களிடமும் இவ்வாறு பரிந்துரைத்தார். தொழிற்சாலைசாலைகள் பெருகியுள்ள நாடுகளின் மறைமாவட்டங்கள், தங்களின் வருவாயில் ஏறத்தாழ ஒரு விழுக்காட்டை மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு வழங்குவதை, தர்மமாகக் கருதாமல், அந்நாடுகளுக்கு தாங்கள் உதவிபுரிய கடமைப்பட்டவர்கள் என்ற உணர்வில் அவற்றை வழங்கவேண்டும். நுகர்வையே நோக்கமாகக்கொண்ட நமது மேற்கத்திய உலகம், வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாடுகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக இதைச் செய்யவேண்டும். மேலும், நாம் அறிந்தே இருக்கின்ற சமுதாயப் பாவத்திற்கு, ஏதாவது ஒருவழியில் பரிகாரம் செய்வதாகவும் இதை நாம் செய்யவேண்டும்.

வெனிஸ் மேய்ப்பராக...

இவ்வாறு மேற்குல நாடுகளின் ஆயர்களிடம் பரிந்துரைத்த, முதுபெரும்தந்தை லூச்சியானி அவர்கள், 1973ம் ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற்ற கர்தினால்கள் அவையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால், கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.  கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள், வெனிஸ் உயர்மறைமாவட்ட முதுபெரும்தந்தையாகப் பணியாற்றிய காலக்கட்டத்தில், இத்தாலி நாட்டில் மணமுறிவு கட்டுக்கடங்காமல் இடம்பெறுவதற்கு ஆதரவளித்த அருள்பணியாளர்களை எதிர்த்தார். அதேநேரம், சில மணமுறிவுகளை இவரே நிறுத்தி வைத்தார். அதேநேரம், மணமுறிவு நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு, 1974ம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பையும் இவர் எதிர்த்தார். ஏனெனில், ஒருமுறை கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சி தோல்வியையே தழுவும் மற்றும், மக்கள் மத்தியில் திருஅவையின் நல்தாக்கத்தைக் குறைப்பதோடு, அதில் பிரிவினை உருவாகவும் காரணமாகும் என்றும் அவர் கூறினார். 1975ம் ஆண்டில், கர்தினால் லூச்சியானி அவர்கள், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளுக்கும், போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவுக்கும் பயணம் மேற்கொண்டார். பாத்திமா சென்ற சமயம், அவர், அருள்சகோதரி லூசியா தோஸ் சாந்தோஸ் அவர்களைச் சந்தித்தார். இச்சகோதரி, 1917ம் ஆண்டில், பாத்திமாவில் அன்னை மரியாவை காட்சியில் கண்டவர்.     

கர்தினால் லூச்சியானி அவர்கள், 1975ம் ஆண்டில், அருள்பணியாளர்களின் அறநெறி வாழ்வில் கண்டிப்பான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவந்தார். கம்யூனிச கட்சிகள் மற்றும், இடதுசாரி குழுக்களுக்கு ஆதரவாகப் பேசும் அருள்பணியாளர்களுக்கு, கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்று இவர் பரிந்துரைத்தார். மாற்றுத்திறன்கொண்ட சிறார்க்கு உதவுவதற்கு நிதி திரட்டுவதற்கென, 1976ம் ஆண்டில், கர்தினால் லூச்சியானி அவர்கள், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்களால் தனக்கு வழங்கப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும், தங்கச் சிலுவையை விற்றார். இந்தச் சங்கிலியும் சிலுவையும், திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களுக்கு உரியதாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும், வெனிஸ் உயர்மறைமாவட்ட அருள்பணியாளர்களும், தங்களிடம் இருக்கும் விலையுயர்ந்த பொருள்களையும், இதே கருத்துக்காக விற்குமாறும், அவர்கள் எளிமையும் தாழ்மையும் நிறைந்த வாழ்வு வாழுமாறும் தூண்டினார், கர்தினால் அல்பினோ லூச்சியானி.

கர்தினால் அல்பினோ லூச்சியானி அவர்கள்தான், 1978ம் ஆண்டில், திருத்தந்தை முதலாம் யோவான் பவுல் என்ற பெயருடன், திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்.

15 July 2020, 09:12