தேடுதல்

Vatican News
சிலே நாட்டின் பாதுகாவலரான கார்மேல் மலை அன்னை சிலே நாட்டின் பாதுகாவலரான கார்மேல் மலை அன்னை  (AFP or licensors)

சிலே நாட்டின் பாதுகாவலரான கார்மேல் மலை அன்னை

கார்மேல் அன்னை மரியாவைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்ல இயலாத இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அன்னை மரியா நம் ஒவ்வொருவர் இல்லத்தையும் தேடிவந்து தன் அரவணைப்பை வழங்குவார் – சிலே நாட்டு ஆயர்கள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சிலே நாட்டின் பாதுகாவலரான கார்மேல் மலை அன்னை மரியாவின் திருநாளன்று, கோவிட்-19 கொள்ளைநோயால் துன்புறும் மக்களுடன், நாட்டுமக்கள் அனைவரும், தங்களையே இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, சிலே நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிலே நாட்டின் அன்னையும், அரசியுமான கார்மேல் மாதாவின் பாதுகாப்பை தேடி மக்கள், இவ்வேளையில், தங்கள் குடும்பங்களையும், சிலே நாட்டையும் அர்ப்பணிக்குமாறு ஆயர்களின் அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

கார்மேல் அன்னை மரியாவைத் தேடி திருத்தலங்களுக்குச் செல்ல இயலாத இந்தக் கொள்ளைநோய் காலத்தில், அன்னை மரியா நம் ஒவ்வொருவர் இல்லத்தையும் தேடிவந்து தன் அரவணைப்பை வழங்குவார் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.

கார்மேல் துறவு சபையின் பாதுகாவலராகக் கருதப்படும் கார்மேல் அன்னை மரியா, இத்துறவு சபையில், வாழ்ந்த புனித சைமன் ஸ்டாக் (Simon Stock) அவர்களுக்கு காட்சியளித்து, அவரிடம், ‘உத்தரியம்’ எனப்படும் மாலையை அளித்தார் என்பது மரபுவழி செய்தி.

2018ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், கார்மேல் அன்னையை பாதுகாவலராகக் கொண்டுள்ள சிலே நாடு, தன் கனவுகளை நிறைவேற்றும் வரத்தை கார்மேல் அன்னை வழங்கட்டும் என்று வாழ்த்தினார்.

16 July 2020, 14:15