தேடுதல்

Vatican News
ஓய்வு பெற்ற வியட்நாம் இராணுவ வீரர்கள் ஓய்வு பெற்ற வியட்நாம் இராணுவ வீரர்கள் 

ஒய்வு பெற்ற வீர்ர்களுக்கு கிறிஸ்தவ, புத்த மதத்தினரின் உதவி

வியட்நாம் நாட்டில், கத்தோலிக்கர்களும், புத்த மதத்தினரும் இணைந்து, ஒய்வு பெற்ற வியட்நாம் இராணுவ வீரர்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வியட்நாம் நாட்டில், கத்தோலிக்கர்களும், புத்த மதத்தினரும் இணைந்து, ஓய்வு பெற்ற வியட்நாம் இராணுவ வீரர்களுக்கு, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறுகிறது.

ஹோ சி மின் பெரு நகரத்தைச் சேர்ந்த 1,200க்கும் அதிகமான ஓய்வு பெற்ற வீரர்கள், பொதுவாகவே, வியட்நாமின் கம்யூனிச அரசால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்றும், இந்த கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், அவர்கள் நிலை இன்னும் மோசமாகியுள்ளது என்றும், ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

இந்நிலையில், இவர்களுக்கு உதவும்வண்ணம், புத்த மதத்தைச் சேர்ந்த Trương Quốc Huy என்பவர், வெளிநாடுகளில் வாழும் வியட்நாம் மக்களிடம் திரட்டிய 60,000 டாலர்கள் நிதி உதவியை, உலக மீட்பர் துறவு சபையின் உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

வியட்நாம் போரினால் உடல் உறுப்புக்களை இழந்த வீரர்களுக்குப் பணியாற்றிவரும் உலக மீட்பர் துறவு சபையினர், கோவிட்-19 கொள்ளைநோயினால் துன்புறும் வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பணியாற்றி வருகின்றனர் என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

புத்த மதத்தினரால் திரட்டப்பட்ட நிதி உதவியைக் கொண்டு, ஹோ சி மின் பெரு நகரத்தின் 24 பகுதிகளில் வாழும் 1,181 வீரர்கள் உலக மீட்பர் துறவு சபையினர் வழியே பலனடைந்து வருகின்றனர். (AsiaNews)

15 July 2020, 13:14