தேடுதல்

Vatican News
இங்கிலாந்தின் Salfordஆயர் John Arnold இங்கிலாந்தின் Salfordஆயர் John Arnold  

பிரித்தானிய மதத்தலைவர்கள்: ஏழை நாடுகளின் கடன்கள் இரத்துசெய்யப்பட

கோவிட்-19 கொள்ளைநோயால், ஏறத்தாழ 10 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் தள்ளப்படுவர். 2020ம் ஆண்டின் இறுதிக்குள், 13 கோடிப் பேர் கடுமையான பசிக்கொடுமையை அனுபவிப்பர் – உலக வங்கி, உலக உணவு திட்ட அமைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மேலும், சவுதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகரில் நடைபெறும் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரித்தானிய நிதி அமைச்சர் Rishi Sunak அவர்கள், உலகின் மிக வறிய நாடுகளின் கடன்களை இரத்து செய்வதற்கு முயற்சிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர், பிரித்தானிய மதத்தலைவர்கள்.

பிரித்தானியாவின் கத்தோலிக்க ஆயர்கள் உள்ளிட்ட, 77 சமயத் தலைவர்கள் கையெழுத்திட்டு, Sunak அவர்களுக்கு அனுப்பியுள்ள மடலில், கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில், 77 வறிய நாடுகளின் கடன்கள் உடனடியாக செலுத்தப்படுவதை நிறுத்திவைப்பது குறித்த ஒப்பந்தம் உருவாக, Sunak அவர்கள் உதவியதற்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடிநிலைகளால் இத்தகைய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ள பிரித்தானிய மதத்தலைவர்கள், இந்த நாடுகள் தங்கள் கடன்களை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதை விடுத்து, அந்த கடன்கள் நிரந்தரமாக, முழுமையாக மன்னிக்கப்படுவதற்கு, Sunak அவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்த 77 ஏழை நாடுகளின், 2020 மற்றும், 2021ம் ஆண்டுகளின் கடன்கள் முழுமையாக மன்னிக்கப்படுவதற்கு, G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள், உலக வங்கி, உலக நிதி அமைப்பு மற்றும், கடன் வழங்கியுள்ள தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை வலியுறுத்துமாறும், Sunak அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர், பிரித்தானிய மதத்தலைவர்கள். 

கோவிட்-19 கொள்ளைநோயால், ஏறத்தாழ 10 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் தள்ளப்படுவர் என்று உலக வங்கி கணக்கிட்டுள்ளதையும், 2020ம் ஆண்டின் இறுதிக்குள், 13 கோடிப் பேர் கடுமையான பசிக்கொடுமையை அனுபவிப்பர் என்று உலக உணவு திட்ட அமைப்பு எச்சரித்துள்ளதையும், அந்த மடலில் குறிப்பிட்டுள்ளனர், பிரித்தானிய மதத்தலைவர்கள். (CNA)

17 July 2020, 12:38