பாகிஸ்தான் காரித்தாஸின் கிராம விழிப்புணர்வுத் திட்டம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 கொள்ளை நோய் பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளை கற்பிக்கும் விழிப்புணர்வுத் திட்டம் ஒன்றை பாகிஸ்தானில் துவக்கியுள்ளது அந்நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் பல கிராமங்களில் கிருமி கொல்லி மருத்துக்கள்பயன்படுத்தப்படுவதில்லை என்பதை தெரியவந்துள்ள பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு, முதலில் கிராமங்களில் இது குறித்த விழிப்புணர்வை ஊட்டத் துவங்கியுள்ளது.
பாகிஸ்தானின் ஏழு மறைமாவட்டங்களிலும், ஆகஸ்ட் 31ம் தேதிவரை இத்திட்டத்தை செயல்படுத்த உள்ள காரித்தாஸ் அமைப்பு, கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற, காரித்தாஸ் சேவையாளர்களுக்கும், சுய விருப்பப்பணியாளர்களுக்கும் ஏற்கனவே பயிற்சி திட்டத்தை துவக்கியுள்ளது.
வானொலி வழியாகவும், ஒலிபெருக்கிகள் வழியாகவும், கிராமங்களில் விழிப்புணர்வை ஊட்டிவரும் காரித்தாஸ் பாகிஸ்தான் அமைப்பு, ஏற்கனவே பாகிஸ்தான் கிராமங்களின் சுகாதார நிலைகள் குறித்த விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
பெரும்பான்மை கிராமங்களில் வாழும் மக்கள், அதாவது, 89 விழுக்காட்டினர், கிருமி கொல்லி மருந்துக்களை பயன்படுத்துவதில்லை எனவும், 71 விழுக்காட்டினர் சுத்திகரிக்கப்படாத தண்ணீரையே பயன்படுத்துவதாகவும், 49 விழுக்காட்டினர் இந்நோய்க்காலத்தில் முகக்கவசம் அணியாமலேயே வெளியிடங்களுக்குச் செல்வதாகவும், 60 கிராமங்களில் பாகிஸ்தானின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவிட்-19 கொள்ளை நோய் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏழை மக்களுக்கு போதிய உணவு கிடைப்பது சிரமமாக இருப்பதை கவனத்தில் கொண்டு, காரித்தாஸ் அமைப்பின் பணியாளர்கள், கிராமங்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களின் உணவு தேவை குறித்து ஆய்வு நடத்தவும் துவங்கியுள்ளனர். (UCAN)