தேடுதல்

கர்தினால் ஜான் டாங் ஹான் கர்தினால் ஜான் டாங் ஹான்  

ஹாங்காக்கில் ஒற்றுமை நிலவ கர்தினால் செபம்

ஜூன் 30, இச்செவ்வாய் நள்ளிரவில், ஹாங்காக், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலையடைந்த 23ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருந்தவேளை, அதற்கு ஒரு மணி நேரத்திற்குமுன், சீன அரசு, புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஹாங்காங் மீது தன் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கும் முறையில், சீன அரசு, புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ள இவ்வேளையில், ஹாங்காக் மக்கள் மத்தியில் ஒன்றிப்பு நிலவவேண்டியது முக்கியம் என்று, ஹாங்காக் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி, கர்தினால் ஜான் டாங் ஹான் (John Tong Hon) அவர்கள் கூறியுள்ளார்.

ஜூன் 30, இச்செவ்வாய் நள்ளிரவில், ஹாங்காக், பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலையடைந்த 23ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவிருந்தவேளை, அதற்கு ஒரு மணி நேரத்திற்குமுன், சீன அரசு, ஹாங்காங்கில், இந்த புதிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு உலக நாடுகள், தங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் வழியாக, சீன அரசு, தனது நாட்டிலும், ஹாங்காக்கிலும், வெளிநாட்டவரின் தலையீடு, தனது நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் மற்றும், பயங்கரவாதத்தை தடுப்பதற்கு முயற்சித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலை குறித்து, Kung Kao Po எனப்படும் ஹாங்காக் மறைமாவட்ட தினத்தாளில் எழுதியுள்ள கர்தினால் டாங் அவர்கள், ஹாங்காக் கத்தோலிக்கத் திருஅவையில் ஒற்றுமை காக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், மக்கள் எல்லாரும் ஒரே ஆயரின்கீழ் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹாங்காக்கில், சமயச்சுதந்திரம் பற்றி, நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த கர்தினால் டாங் அவர்கள், இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம், சமய சுதந்திரத்தின் மீது எதிர்மறைத் தாக்கத்தைக் கொண்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். 

திருப்பீடத்திற்கும், ஹாங்காக் மறைமாவட்டத்திற்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்து குறிப்பிட்ட கர்தினால் டாங் அவர்கள், இந்த விவகாரம் குறித்து, பலர் அக்கறையாய் இருக்கலாம், எனினும், இது ஹாங்காக் கத்தோலிக்கத் திருஅவையின் உள்விவகாரமாக நோக்கப்படவேண்டும் மற்றும், இதில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு தவிர்க்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து, ஹாங்காக்கில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், ஜூலை 1, இப்புதனன்று ஏறத்தாழ 370 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிரித்தானியாவின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997ல், ஒரு நாடு, இரண்டு நடைமுறை என்ற அடிப்படையிலும், ஹாங்காங்குக்கு தனி நிர்வாகம் இருக்கவேண்டும் என்ற உறுதியிலும், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

02 July 2020, 14:47