தேடுதல்

ஹாங்காங்கில் போராட்டம் ஹாங்காங்கில் போராட்டம்  

கர்தினால் போ : ஹாங்காக்கிற்காக செபிப்போம்

கர்தினால் போ – ஹாங்காங்கில், மத நிறுவனங்கள் மீதும், அவை பொதுமக்களுக்கு ஆற்றும் பணிகள் மீதும், அரசு தலையிடுவதற்கு, சீன அரசின் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அனுமதி அளிக்காது என்று நம்புகிறேன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சீன அரசு, ஹாங்காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில், கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்றுவரும்வேளை, ஆசியாவிலும், உலகெங்கிலும் இருக்கின்ற அனைத்து கிறிஸ்தவ சபைகளும், அனைத்து மதத்தவரும், ஹாங்காங் மற்றும், அனைத்து சீன மக்களுக்காகச் செபிக்குமாறு  அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் சார்லஸ் மாங் போ.

FABC எனப்படும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, மியான்மார் கர்தினால் போ அவர்கள், சீனா அமல்படுத்தியுள்ள இந்த புதிய சட்டம், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தையும், சுதந்திரத்தையும் அழிக்கும் என்றும், இது பொதுமக்களிடம் சரியாக கலந்தாலோசிக்கப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். 

ஒரு நாடு, இரு அமைப்புமுறைகள் என்ற வாக்குறுதியுடன், 1997ம் ஆண்டில், பிரித்தானியா, ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது என்றும், இந்த சட்டம் இந்த வாக்குறுதியை மீறுவதாக உள்ளது என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இந்த புதிய சட்டம், ஹாங்காங் மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களுக்கும், மனித உரிமைகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

சீனாவில் இடம்பெற்ற கலாச்சார புரட்சிக்குப்பின், அந்நாட்டில் சமய சுதந்திரத்தின் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக, பல அறிக்கைகள் வெளிவந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ அவர்கள், மத நிறுவனங்களிலும், அவை பொதுமக்களுக்கு ஆற்றும் பணிகளிலும், அரசு தலையிடுவதற்கு, இந்த புதிய சட்டம் அனுமதி அளிக்காது என்று, தான் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 1997ம் ஆண்டிலிருந்து, ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாக உள்ளது. ஜூலை 30, இச்செவ்வாய் இரவு 11 மணிக்கு, ஹாங்காங்கில் சீனா நடைமுறைபடுத்தியுள்ள இப்புதிய சட்டத்தின் வழியாக ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரம் ஒழிக்கப்பட்டுவிடும் என்று விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் சீன அரசு அமல்படுத்தியுள்ள புதிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2020, 13:42