தேடுதல்

Vatican News
ஹாயா சொஃபியா முஸ்லிம்களின் தொழுகைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு ஹாயா சொஃபியா முஸ்லிம்களின் தொழுகைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு   (AFP or licensors)

ஹாயா சொஃபியா குறித்து கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள்

துருக்கி நாட்டின் ஹாயா சொஃபியா அருங்காட்சியகம், இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள முடிவு, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை மோசமடையச் செய்யும் - ஆஸ்திரேலிய கிறிஸ்தவத் தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரிலுள்ள புகழ்பெற்ற ஹாயா சொஃபியா (Hagia Sophia) அருங்காட்சியகம், 86 ஆண்டுகளுக்குப்பின், முதல்முறையாக, ஜூலை 24, இவ்வெள்ளியன்று, முஸ்லிம்களின் தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, இந்த பைசன்டைன் பேராலயத்தின் தன்மையை மாற்றுவதற்கு, துருக்கி அரசு எடுத்துள்ள தீர்மானம் பற்றி, மின்னஞ்சல் வழியாக அறிக்கை வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இந்த நடவடிக்கை, இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிளவுகளை ஆழப்படுத்தும் மற்றும், காயங்களை மீண்டும் திறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

புனித ஞானம் என்று பொருள்படும் ‘ஹாயா சொஃபியா’ என்ற பெயருடன், பல நூற்றாண்டுகளுக்கு முன், புகழுடன் திகழ்ந்த உலகின் மிகப்பெரிய பேராலயம், இஸ்லாமியரின் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டிருப்பது, மக்கள் மத்தியில் பதட்டநிலைகள், பிரிவினைகள் மற்றும், வேதனையை விதைக்காமல் வேறு என்ன செய்யும்? என்ற கேள்வியை, மியான்மார் நாட்டு கர்தினால் போ அவர்கள் எழுப்பியுள்ளார்.

உண்மையான மதச் சுதந்திரம் என்பது, ஒருவர் தனது மதம் சார்ந்த நடவடிக்கைகளைச் சுதந்திரமாகச் செயல்படுத்துவதும், அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதுவுமே என்று கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், இக்காரணத்தினால், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவப் பேராலயமாக இருந்த ஹாயா சொஃபியா, மசூதியாக மாற்றப்பட்டிருப்பது வேதனையளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

கி.பி.537ம் ஆண்டில் பேரரசர் ஜூஸ்தீனியன் அவர்களால் கட்டப்பட்ட ஹாயா சொஃபியா, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையின் பேராலயமாக இருந்துவந்தது. 1453ம் ஆண்டில் ஒட்டமான்கள், அந்நகரைக் கைப்பற்றியபின், அது மசூதியாக மாற்றப்பட்டது. பின்னர், சமயச்சார்பற்ற துருக்கி குடியரசின் முதல் அரசுத்தலைவராகிய Mustafa Kemal Atatürk அவர்கள், 1923ம் ஆண்டில் அதை ஓர் அருங்காட்சியகமாக மாற்றினார். (CNA)

ஆஸ்திரேலிய கிறிஸ்தவ தலைவர்கள்

மேலும், ஆஸ்திரேலிய கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் தலைவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஹாயா சொஃபியா அருங்காட்சியகம், இஸ்லாமியத் தொழுகைக்கூடமாக மாற்றப்பட்டுள்ள முடிவு,  இஸ்லாமியருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவும் பதட்டநிலைகளை மோசமடையச் செய்யும் என்ற தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, மாறாக, இயேசு கிறிஸ்துவால் அவரின் அமைதியை அனைவருக்கும் அறிவிக்க அனுப்பப்பட்டவர்கள் என்றும், ஒரு காலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டு இடமாகவும், பின்னர் மிக அண்மை காலத்தில், உலக கலாச்சார கருவூலத்தின் சின்னமாகவும் மாற்றப்பட்டிருந்த Hagia Sophia/Aya Sofyaவின் தன்மையை மாற்றுவது குறித்த துருக்கி அரசின் தீர்மானம் பற்றி வருத்தம் தெரிவிக்கும் பல்வேறு உலகின் குரல்களோடு எங்களையும் இணைக்கின்றோம் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Zenit)

25 July 2020, 13:24