தேடுதல்

Vatican News
மியான்மார் கர்தினால் போ, மற்றும் தலைவர்கள் மியான்மார் கர்தினால் போ, மற்றும் தலைவர்கள்  (AFP or licensors)

அமைதியை ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்

மியான்மார் மக்கள், போர்கள் மற்றும், பகைமைகளால் மிகவும் சோர்வடைந்துள்ளனர், அந்நாட்டில் நடைபெறும் போர், ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்படக் கூடாது? இதற்கு யார் பொறுப்பு? - கர்தினால் போ.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டில், வருகிற நவம்பரில் தேசிய அளவிலான பொதுத் தேர்தல்கள், 21ம் நூற்றாண்டின் Panglong கருத்தரங்கு ஆகிய இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளவேளை, நாட்டின் அரசியல் மற்றும், மதத்தலைவர்கள், ஒருவர் ஒருவருக்குச் செவிசாய்க்கவும், அனைவருக்கும் நன்மையைக் கொணரும் காரியங்களைத் தேடவும் வேண்டும் என்று, அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல்சமய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.

ஜூலை 13, இத்திங்களன்று, மியான்மார் கத்தோலிக்கத் திருஅவையின் சார்பாக, செய்தி வெளியிட்டுள்ள, யாங்கூன் பேராயர், கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள், இப்போது உலகம் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் மற்றும், புதிய சூழல்களுக்கு மத்தியில், இந்த இரு நிகழ்வுகளும், மியான்மாரில் அமைதியைக்கொணர, மிகச்சிறந்த நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளன என்று, கூறியுள்ளார்.

மியான்மார் கத்தோலிக்கச் சமுதாயம் மற்றும், நாட்டினர் அனைவர் மத்தியிலும், அமைதியும் ஒப்புரவும் நிலவவேண்டும் என்ற தன் ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளார், கர்தினால் போ.

மியான்மார் மக்கள், போர்கள் மற்றும், பகைமைகளால் மிகவும் சோர்வடைந்துள்ளனர், போர், ஒவ்வொருவரையும் அவமதிக்கின்றது, அந்நாட்டில் நடைபெறும் போர் ஏன் முடிவுக்குக் கொண்டுவரப்படக்கூடாது? இதற்கு யார் பொறுப்பு? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார், கர்தினால் போ.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில் போர்நிறுத்தத்தைக் கடைப்பிடிக்காத இராணுவத்தையோ, போதைப்பொருள் அல்லது பச்சை மாணிக்கக் கல் வர்த்தகத்திலிருந்து ஆதாயம் தேடும் இனக்குழுக்களின் தலைவர்களையோ, அநீதிகளுக்கு எதிராகப் போராட வெட்கப்படும் மதத்தலைவர்களின் போக்கையோ, அரசின் பலவீனமான அதிகாரத்தையோ, எவற்றையானாலும், எவரும் இதற்கு குறை கூறலாம் என்றும், கர்தினாலின் செய்தி கூறுகிறது.

உலகம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளில், முக்கியமான மூன்றை, மியான்மார் நாடு எதிர்கொள்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கர்தினால் போ  அவர்கள், கோவிட்-19 பிரச்சனை, இந்த நூற்றாண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து நாடுகளில் ஒன்றாக மியான்மார் இடம்பெற்றிருப்பது, இனங்களுக்கிடையே நிலவும் உறவு சிக்கல்கள் ஆகிய மூன்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கர்தினால் போ அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தியில், மியான்மாரின் அமைதிக்கு மதங்கள் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர். (Fides)

Panglong கருத்தரங்கு என்பது, 1947ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில், மியான்மாரின் Panglong என்ற நகரில், ஒன்றிணைந்த மியான்மார் நாடு உருவாவதற்கு, அனைத்து இனக்குழுக்களும் இணைந்து நடத்திய நிகழ்வாகும். இந்தக் கருத்தரங்கில், மியான்மார் நாடு, (பர்மா) பிரித்தானியாவிடமிருந்து விடுதலையடைய ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

14 July 2020, 13:42