தேடுதல்

Vatican News
கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி  

கொள்ளைநோய் நெருக்கடியில் துன்புறும் மக்களுக்கு உதவுங்கள்

பங்குத்தளங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலப்பகுதியில், அருள்பணியாளர்கள், பங்கு மக்களோடு சேர்ந்து பயிரிடுமாறும், பங்கில் எந்த ஒரு நிலமும் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடாது என்றும், கர்தினால் ஆலெஞ்சேரி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோரளாவின் சீரோ-மலபார் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்களும், பொதுநிலை விசுவாசிகளும், தங்களின் வாழும் முறையை எளிமையாக்கி, துன்புறும் மக்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார், கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி (George Alencherry).

ஜூலை 03, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட புனித தோமையாரின் விழாவையொட்டி, செய்தி வெளியிட்டுள்ள சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் தலைவரான, கர்தினால் ஜார்ஜ் ஆலெஞ்சேரி அவர்கள், அனைவரும் ஆடம்பரமான வாழ்வுமுறை மற்றும், ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் புனித தோமையார் விழாவையொட்டி தனது சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவைக்கு செய்தி வெளியிட்டுவரும், கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள், இவ்வாண்டு, கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியிருக்கும் நெருக்கடிநிலையை மையப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளார்.

தனது திருஅவையைச் சார்ந்த ஆயர்களும், பங்குத்தந்தையரும், புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்வதற்குப் பணத்தைச் செலவழிக்காமல், பொருளாதார நெருக்கடியால் துன்புறும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் ஆலஞ்சேரி.

கேரள மாநிலத்தில் உணவு உற்பத்தியில் அனைவரும் தன்னிறைவு பெறுவதற்கு தங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கவேண்டுமென்று கேரள அரசு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தது. இது குறித்து, கேரள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில், கத்தோலிக்கரும் இணையுமாறு, கர்தினால் ஆலஞ்சேரி அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கர்தினாலின் இந்த செய்தி குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய அருள்பணியாளர் ஜோஸ் அவர்கள், பங்குத்தளங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலப்பகுதியில், அருள்பணியாளர்கள், பங்கு மக்களோடு சேர்ந்து பயிரிடுமாறும், எந்த ஒரு நிலமும் பயன்படுத்தப்படாமல் இருக்கக்கூடாது என்றும், கர்தினால் கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த மே மாதத்திலிருந்து, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்தோர் கேரளாவிற்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையின்றி உள்ளனர். (AsiaNews)

04 July 2020, 14:21