தேடுதல்

Vatican News
மியான்மாரில் நிலச்சரிவால் உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்கள் மியான்மாரில் நிலச்சரிவால் உயிரிழந்த சுரங்கத் தொழிலாளர்கள்  (AFP or licensors)

பேராசைக்குப் பலியான சுரங்கத் தொழிலாளர்கள்

உலகில் விற்பனை செய்யப்படும் பச்சை மாணிக்கக்கற்களில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டை, மியான்மார் நாடு விநியோகம் செய்கிறது. இந்தக் கற்கள் பெரும்பாலும், வட மியான்மாரில், கச்சின் மாநிலத்தில் வெட்டப்படுகின்றன. - Églises d’Asie

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மியான்மார் நாட்டின் வடக்கேயுள்ள Phakant பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில்,  அண்மையில், ஜூலை 02ம் தேதி உயிரிழந்துள்ள 172 தொழிலாளர்கள், பேராசை என்ற பீடத்தில் பலியாக்கப்பட்டுள்ளனர் என்று, அந்நாட்டு யாங்கூன் பேராயர், கர்தினால் சார்ல்ஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

மியான்மாரின் ஏழைகளை மனிதமற்றநிலையில் தொடர்ந்து நடத்திவரும் சுரங்க நிறுவனங்களின் புறக்கணிப்பு மற்றும், ஆணவமே, இந்த தொழிலாளரின் உயிரிழப்புக்குக் காரணம் என்றும் கூறியுள்ளார், கர்தினால் போ.

இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, கர்தினால் போ அவர்கள், இவர்கள், நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்துள்ளவர்கள் மட்டுமல்ல, அநீதியின் நிலச்சரிவால் இறந்தவர்கள் என்று கூறியுள்ளார்.    

இதற்கிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும், 360 டாலர்கள் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ள மியான்மார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும், இயற்கை வளங்கள் அமைச்சர் U Ohn Win அவர்கள், சட்டத்திற்குப் புறம்பே சுரங்கத்தொழிலை நடத்துவோரின் பேராசையே இந்த விபத்திற்கு காரணம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இம்மாதம் 02ம் தேதி, புறக்கணிக்கப்பட்டிருந்த மண் குவியல் ஒன்றிலிருந்து, கனமான இயந்திரங்களைக்கொண்டு, பச்சை மாணிக்கக் கல்லைத் தோண்டி எடுக்கையில் மண் சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விலையுயர்ந்த கற்கள், பெரும்பாலும் சீனாவுக்கு விற்கப்படுகின்றன என்று செய்திகள் கூறுகின்றன. 

Églises d’Asie என்ற செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகில் விற்பனை செய்யப்படும் பச்சை மாணிக்கக்கற்களில் ஏறத்தாழ எழுபது விழுக்காட்டை, மியான்மார் நாடு விநியோகம் செய்கிறது. இந்த கற்கள் பெரும்பாலும், வட மியான்மாரில், கச்சின் மாநிலத்தில் வெட்டப்படுகின்றன. சுத்தமான பச்சை மாணிக்கக் கற்களாகிய இவை, பேரரசு பச்சை மாணிக்கக் கற்கள் என அழைக்கப்படுகின்றன. இவை, ஒரு கிலோ இருபதாயிரம் அமெரிக்க டாலர் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. 

2015ம் ஆண்டில் வெளியான ஓர் அறிக்கையின்படி, மியான்மார் நாட்டிற்கு, இந்த பச்சை மாணிக்கக் கல் தொழிற்சாலையால், ஆண்டுக்கு 31 பில்லியன் டாலர் பணம் கிடைக்கிறது. இது அந்நாட்டின் உற்பத்தியில் 40 விழுக்காட்டிற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது. (AsiaNews)

10 July 2020, 13:05