தேடுதல்

Vatican News
பாலஸ்தீனாவில் வயதுமுதிர்ந்தோர் பாலஸ்தீனாவில் வயதுமுதிர்ந்தோர்  (AFP or licensors)

கோவிட்-19 நெருக்கடியில் வயது முதிர்ந்தோர் ஆதரிக்கப்பட...

வயதுமுதிர்ந்தோர், வாழ்விற்குத் தேவையான முக்கியமான விழுமியங்களைக் கற்றுத்தருகின்றனர். அவர்கள் புறக்கணிக்கப்படும் கலாச்சாரத்திற்குப் பலியாகாமல் இருப்பதில் அக்கறை காட்டுவோம் - இஸ்பெயின் ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், அளவற்ற துன்பங்களை எதிர்நோக்கும் வலுவற்ற மக்கள் மீது, குறிப்பாக, வயதுமுதிர்ந்தோர் மீது, மிகுந்த அக்கறை காட்டப்படுமாறு, கனடா மற்றும், இஸ்பெயின் நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே துன்பம் நிறைந்த சூழலில் வாழ்கின்ற வயதுமுதிர்ந்தோர், இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்திலும், அதைத் தொடர்ந்துவரும் காலத்திலும் எதிர்நோக்கும்  சவால்கள் குறித்தும், அவற்றை களையும் வழிமுறைகள் குறித்தும், கனடா நாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றன என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் செயல்திட்ட குழு கூறியுள்ளது.

கோவிட்-19 தனித்திருத்தல் விதிமுறையால், வயதுமுதிர்ந்தோர் பலர், பல வாரங்களாக கவனிக்கப்படாமலேயே உள்ளனர் எனவும், இவர்களில் பலர், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றும், திருஅவை வழங்கும் அருளடையாளங்கள் இன்றி இறந்துள்ளனர் என்றும், கனடா ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலை மனதை நொறுக்குகின்றது என்று கூறியுள்ள கனடா ஆயர்கள், நோயுற்ற வயதுமுதிர்ந்தோர் பலருக்கு, தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படாமலேயே அவர்கள் இறந்துள்ளது கவலை தருகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், இஸ்பெயின் நாட்டு ஆயர் பேரவையின் சமுதாய விவகாரப் பணிக்குழு, தலைமுறை இடைவெளி குறித்து குறிப்பிட்டுள்ளதோடு, வரையறையற்ற சுதந்திரம் என்ற பெயரில், சமுதாயத்தில் இளைஞர்கள் வாழ்ந்துவரும் முறை பற்றியும் எச்சரித்துள்ளது.

வயதுமுதிர்ந்தோர், வாழ்விற்குத் தேவையான முக்கியமான விழுமியங்களைக் கற்றுத்தருகின்றனர் என்றும், இதனால் நம் மத்தியில் வாழ்கின்ற இவர்களை மறக்காமல், அவர்களுக்கு நம் இதயங்களில் இடமளிப்போம் என்றும், அவர்கள் புறக்கணிக்கப்படும் கலாச்சாரத்திற்குப் பலியாகாமல் இருப்பதில் அக்கறை காட்டுவோம் என்றும், இஸ்பெயின் ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.      

ஜூலை 26ம் தேதி, ஞாயிறன்று, அன்னை மரியாவின் பெற்றோர், புனித அன்னா, மற்றும் புனித சுவக்கீன் திருநாளன்று, இஸ்பானிய தலத்திருஅவை, வயதுமுதிர்ந்தோர் நாளைச் சிறப்பிக்கின்றது. (UCAN)

17 July 2020, 12:43