தேடுதல்

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர், ஸ்டீபன் பிள்ளை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர், ஸ்டீபன் பிள்ளை 

முன்னரும் சித்ரவதைப்படுத்திய சாத்தன்குள காவல்நிலையம்

தூத்துக்குடி ஆயர் : சாத்தான்குளம் சித்ரவதை மரணங்கள் தொடர்பாக, காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தூத்துக்குடியின் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவர்களும், அவரது மகன் பெனிக்ஸ் இம்மானுவேல் என்பவரும் காவல் துறையால் அடித்தே கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது என கூறியுள்ளார், தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர், ஸ்டீபன் பிள்ளை.

மதுரை நீதிமன்றம், தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்ததுடன், குற்றமிழைத்தவர்களை கைதுசெய்யவும் ஆணை பிறப்பித்தது குறித்து, திருஅவைத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும் தங்கள் பாராட்டுக்களை வெளியிட்டுவரும் வேளையில், இக்கைதுகள் குறித்து, தன் பாராட்டுகளை வெளியிட்ட  தூத்துக்குடி ஆயர் ஸ்டீபன் பிள்ளை அவர்கள், மதுரை நீதிமன்றம்,  பாராட்டுக்குரிய ஒரு செயலை ஆற்றியுள்ளது எனவும், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

கோவிட்-19 கட்டுப்பாடு காலத்தில், பெனிக்ஸ் இம்மானுவேல் என்பவர், தன் கடையை, குறிக்கப்பட்ட நேரத்தில் மூடாமல் திறந்துவைத்திருந்ததற்காக, அவரின் தந்தையை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதையொட்டி,  அது குறித்து விசாரிக்கச் சென்ற மகன் பெனிக்ஸையும் காவல் நிலையத்திலேயே சித்ரவதைப்படுத்தியதைத் தொடர்ந்து, இருவரும் மூன்று நாட்களுக்குப்பின் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மாநில அளவில் இடம்பெற்ற போராட்டங்கள், மற்றும், நீதிமன்றத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்குப்பின், காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டது குறித்து கருத்துக்களை வெளியிட்ட ஆயர் ஸ்டீபன் பிள்ளை அவர்கள், தற்போது நீதிமன்றம், தன் கட்டுப்பாட்டிற்குள் இந்த வழக்கைக் கொணர்ந்து, தீவிரமாக கண்காணித்துவரும் நிலையில், இதனை இன்னொரு புலனாய்வு அமைப்பிற்கு மாற்றும் அரசின் பரிந்துரை, காலதாமதத்தை ஏற்படுத்தி, நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக்களை குறைக்கும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே, இவ்வாண்டு, பிப்ரவரி மாதத்தில், இதே காவல் நிலையத்தில், ஒரு கிறிஸ்தவ மதபோதகரும் எட்டு கிறிஸ்தவர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து முறையான விசாரணைகள் இடம்பெற்றிருந்தால், பெனிக்ஸ், மற்றும், அவரின் தந்தையும் இத்தனை கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க மாட்டார்கள், அவர்களின் உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும் என கவலையை வெளியிட்ட, மகாராஷ்டிர சிறுபான்மை அமைப்பின் முன்னாள் உறுப்பினர், ஆபிரகாம் மத்தாய் அவர்கள், கிறிஸ்தவ போதகர் குறித்த வழக்கு, கோவிட் -19 காலத்தில் காலத்தாமதமாகியது ஒரு காரணம் என்றார்.

பெனிக்ஸ், மற்றும், அவரின் தந்தையும் காவல் நிலையத்தில் சித்ரவதைப்படுத்தப்பட்டபோது, அவர்களின் இரத்தம் தோய்ந்த உடைகள் மும்முறை மாற்றப்பட்டுள்ளன என்று கூறிய, இயேசுசபை அருள்பணியாளர், வழக்கறிஞர் சகாய பிலோமின் ராஜ் அவர்கள், குற்றம் சுமத்தப்பட்ட காவல்துறையினர், ஏற்கனவே தடயங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகம் இடம்பெறும் நிலையில், மீதி தடயங்களையாவது விரைவாக காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2020, 14:16