தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்திற்கு எதிர்ப்பு பிலிப்பீன்சில் பயங்கரவாதத்திற்கெதிரான சட்டத்திற்கு எதிர்ப்பு   (AFP or licensors)

பிலிப்பீன்ஸ்: பயங்கரவாதத்திற்கெதிரான சட்டம் அநீதியானது

திருஅவை மற்றும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்கள், ஜூலை 03, இவ்வெள்ளியன்று, பயங்கரவாதத்திற்கெதிரான சட்டவரைவில் கையெழுத்திட்டு, அதனைச் சட்டமாக அங்கீகரித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்சில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கெதிரான சட்டம், சுதந்திரம், நீதி, மற்றும், பரிவன்பு ஆகிய முக்கிய விழுமியங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பின் தலைவர், ஆயர் Jose Bagaforo அவர்கள் கூறியுள்ளார்.

திருஅவை மற்றும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்கள், ஜூலை 03, இவ்வெள்ளியன்று, பயங்கரவாதத்திற்கெதிரான சட்டவரைவில் கையெழுத்திட்டு, அதனைச் சட்டமாக அங்கீகரித்துள்ளார். இச்சட்டம், வரும் வாரங்களில், அமலுக்கு வரும் என்று செய்திகள் கூறுகின்றன.

இச்சட்டம், மனிதாபிமானமற்றது மற்றும், அநீதியானது என்று கூறியுள்ள ஆயர் Jose Bagaforo அவர்கள், இது அரசியல் விமர்சகர்களை மௌனப்படுத்தவும், அரசுக்கு எதிரான முரண்பாடுகளை ஒடுக்கவும், மக்களின் அனைத்து அடிப்படை சுதந்திரங்களைப் பறிப்பதற்காகவும் அரசு கையிலெடுத்துள்ள முயற்சி என்றும் குறை கூறியுள்ளார்.

மேலும், இச்சட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள, மனிலா   உயர்மறைமாவட்டத்தின் 230க்கும் அதிகமான அருள்பணியாளர்கள், இச்சட்டம், நன்மையைவிட தீமையையே அதிகம் கொணரும் என்று எச்சரித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய இச்சட்டம், அதிகாரிகளுக்கு அதிகபட்ச அதிகாரத்தை அளிக்கும் என்றும், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறைகளைத் தடம்புரளச்செய்யும் என்றும், அருள்பணியாளர்கள் மேலும் எச்சரித்துள்ளனர்.

பேச்சு சுதந்திரம், சொத்துரிமை உட்பட பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு இந்தப் புதியச் சட்டம் உறுதிவழங்கவில்லை என்று கூறியுள்ள அருள்பணியாளர்கள், இந்தச் சட்டவரைவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு, துத்தர்த்தே அவர்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (CBCP/UCAN)

04 July 2020, 14:28