தேடுதல்

துருக்கி நாட்டின் Hagia Sophia அருங்காட்சியகம் துருக்கி நாட்டின் Hagia Sophia அருங்காட்சியகம்  

Hagia Sophiaவை மசூதியாக மாற்றுவது, கிறிஸ்தவர், இஸ்லாமியரிடையே...

Hagia Sophiaவின் புனிதநிலை, மேற்கும் கிழக்கும் சந்திப்பதற்கு முக்கிய மையமாக அமைந்துள்ளது. இந்த மையம், மசூதியாக மாற்றப்படுவது, இந்த இரு உலகங்களுக்கு இடையே பிரிவினையை உருவாக்கும் – முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

துருக்கி நாட்டில், ஆறாம் நூற்றாண்டில் கிறிஸ்தவப் பேராலயமாக எழுப்பப்பட்டு, பின்னர் ஒரு மசூதியாகவும், அதன்பின்னர், அருங்காட்சியமாகவும் மாற்றப்பட்டுள்ள, Hagia Sophia மையம், மீண்டும் மசூதியாக மாற்றப்படுவது, கிறிஸ்தவ உலகம், இஸ்லாமுக்கு எதிராக கசப்புணர்வைத் தூண்டிவிடும் என்று எச்சரித்துள்ளார், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ

உலகப் புகழ்பெற்ற நீலநிற Hagia Sophia மையம் மசூதியாக மாற்றப்படும் என்று, துருக்கி நாட்டு நீதிமன்றம் ஒன்று அறிவித்ததைத் தொடர்ந்து, திருத்தூதர்கள் விழாவான ஜூன் 29 இத்திங்களன்று நிறைவேற்றிய திருவழிபாட்டில், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் இவ்வாறு எச்சரித்தார்.

Hagia Sophiaவின் புனிதம், மேற்கும் கிழக்கும் சந்திப்பதற்கு முக்கிய மையமாகவும், இவ்விரு உலகங்களும் ஒன்றையொன்று வியந்துநோக்கும் இடமாகவும் அமைந்துள்ளது என்றும், இந்த மையத்தை மசூதியாக மாற்றுவது, 21ம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் உலகத்திற்கு இடையே கசப்புணர்வுக்கு இட்டுச்செல்லும் என்றும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

புனித சோஃபியா மையம், முழு மனித சமுதாயத்திற்கும் சொந்தமானது என்றும், வரலாற்று சிறப்புமிக்க இந்த நினைவுச்சின்னத்தின் உலகளாவிய தன்மையைக் காப்பாற்றுவதற்கு, துருக்கி நாட்டு மக்களுக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது என்றும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் கூறியுள்ளார்.

சோஃபியா மையம், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் உலகங்களுக்கிடையே அருங்காட்சியகமாகவும், சந்திப்பு, உரையாடல், மற்றும் புரிந்துணர்வின் இடமாகவும் அமைந்துள்ளது என்பதையும், முதுபெரும்தந்தை பர்த்தலோமேயோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையே, அரசுத்தலைவர் தாயிப் எர்டோகான் (Tayyip Erdogan) மற்றும், பல்வேறு அமைச்சர்கள் பல ஆண்டுகளாக இத்திட்டம் பற்றிய தங்களின் ஆவலை தெரிவித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சோபியா மையம், இன்னும் 15 நாள்களுக்குள், மசூதியாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.     

சோஃபியா அருங்காட்சியகம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரத்தில், கி.பி.537ம் ஆண்டில், ஜூஸ்டீனியன் பேரரசர் காலத்தில், பைசான்டைன் கலைநுட்பத்தில் எழுப்பப்பட்ட, இந்த சோஃபியா கிறிஸ்தவ பேராலயம், அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய கட்டடமாக விளங்கியது. மேலும், அக்காலத்தின் பொறியியல் கலைக்கும் இது சிறந்து விளங்கியது. அதன் மிகப்பெரிய மேல்கோபுரம் மிகவும் புகழ்பெற்றது.

இந்த Hagia Sophia மையம், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் பேராலயமாக இருந்தது. பின்னர், அது ஒட்டமான் பேரரசு காலத்தில் மசூதியாக மாற்றப்பட்டது. தற்போது அந்த மையம், அருங்காட்சியமாக (Ayasofya Müzesi), சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2020, 13:25