தேடுதல்

Vatican News
வாஷிங்டன் பேராயர் வில்டன் கிரகரி வாஷிங்டன் பேராயர் வில்டன் கிரகரி 

புண்ணிய தலத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிர்ச்சியைத் தருகிறது

வாஷிங்டன் நகரில் உள்ள புனித 2ம் ஜான்பால் தேசிய திருத்தலத்திற்கு, அந்நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள் சென்றது, அவரது சுய ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் - வாஷிங்டன் பேராயர் வில்டன் கிரகரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 2, இச்செவ்வாயன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டன் நகரில் உள்ள புனித 2ம் ஜான்பால் தேசிய திருத்தலத்திற்கு, அந்நாட்டு அரசுத்தலைவர், டொனால்டு டிரம்ப் அவர்கள் சென்றது, அவரது சுய ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு செயல் என்று வாஷிங்டன் பேராயர் வில்டன் கிரகரி (Wilton Gregory) கூறியுள்ளார்.

அரசுத்தலைவரின் வருகை குறித்து அறிந்த பேராயர் கிரகரி அவர்கள், மக்களின் உரிமைகள் பலவழிகளில் மீறப்பட்டுள்ள இவ்வேளையில், அரசுத்தலைவர், ஒரு மதத்தின் புண்ணிய தலத்தை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது என்று ஓர் அறிக்கையின் வழியே கூறியுள்ளார்.

மனித உரிமைகளையும், மனித மாண்பையும் காப்பதற்கு தீவிரமாக உழைத்தவர் புனித 2ம் ஜான் பால் அவர்கள் என்று தன் அறிக்கையில் கூறியுள்ள பேராயர் கிரகரி அவர்கள், நியாயமான கோரிக்கைகளுடன் போராடுவோரை கண்ணீர் புகை கொண்டு விரட்டிவிட்டு, அங்கு தன்னையே புகைப்படம் எடுத்துக்கொள்வதை, புனித 2ம் ஜான் பால் அவர்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று கூறியுள்ளார்.

ஜூன் 1ம் தேதி திங்களன்று, வெள்ளை மாளிகைக்கு அருகிலிருந்த எபிஸ்கோப்பல் ஆலயத்திற்கு அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் சென்ற வேளையில், அக்கோவிலுக்குமுன் கூடி, தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோரை கண்ணீர் புகைகொண்டு காவல்துறை விரட்டியடித்தபின், டிரம்ப் அவர்கள், விவிலியத்தை சுமந்து நிற்பதுபோன்ற புகைப்படங்களை எடுத்துக்கொண்டார்.

அரசுத்தலைவரின் இந்தச் செயலுக்கு எபிஸ்கோப்பல் ஆயர் Mariann Edgar Budde அவர்களும், ஏனைய எபிஸ்கோப்பல் சபைத் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

ஆலயத்திற்குச் சென்ற அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள், அங்கு செபிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திய ஆயர் Budde அவர்கள், அன்பை பறைசாற்றும் விவிலியத்தை, அரசுத்தலைவர் தன் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

புனித 2ம் ஜான்பால் தேசிய திருத்தலத்திற்கு அருகே உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்கள், அரசுத்தலைவரின் வருகை குறித்து அறிந்தபோது, 'எங்கள் ஆலயங்கள் விளம்பரப் புகைப்படங்களுக்காக கட்டப்படவில்லை' என்றும், 'கறுப்பின மக்களின் வாழ்க்கை மதிப்புள்ளவை' என்றும் எழுதப்பட்ட வாசகங்களைத் தாங்கி நின்றனர்.

அனைத்துலக மத சுதந்திரம் குறித்த ஓர் அரசாணையில் கையெழுத்திடுவதற்கு, அரசுத்தலைவர் டிரம்ப் அவர்கள் இந்த திருத்தலத்தை தெரிவு செய்துள்ளார் என்று வெள்ளை மாளிகையிலிருந்து தங்களுக்குத் தகவல் வந்தது என்று, இத்திருத்தலத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.

03 June 2020, 15:11