கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
தற்கொலைக்கு உதவி புரிவதாக இருக்கும் கருணைக்கொலையை ஒருநாளும் ஏற்றுக்கொள்ளமுடியாது என, தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர், உருகுவாய் நாட்டு ஆயர்கள்.
நோயுற்றிருக்கும் ஒரு மனிதர், தாங்காத வலியால் துடித்தாலும், அவரே விரும்பினாலும், அவரின் உயிரைப் பறிக்கும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறும் உருகுவாய் நாட்டு ஆயர்கள், கருணைக்கொலை குறித்த விவகாரம் மக்களவைப் பிரதிநிதிகளிடையே இடம்பெற்றுவரும் வேளையில், இது குறித்த தெளிவான சிந்தனைகளை மக்களுக்கு வழங்குவது திருஅவையின் கடமை என்பதையும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஒருவரின் உயிரை பறிப்பதற்கு, மருத்துவப்பணியாளர்களுக்கோ, நோயுற்றிருக்கும் மனிதருக்கோ, அவரின் உறவினர்களுக்கோ உரிமையில்லை என்பதை தங்கள் அறிகையில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அவ்வாறு உயிரை பறிப்பது, கொலைக்கு ஈடாகும் எனவும் கூறியுள்ளார்.
மனித வாழ்வின் மதிப்பை குறைவாக மதிப்பிடும் கருணைக்கொலையை அங்கீகரிப்பது தவிர்க்கப்படவேண்டும், ஏனெனில், வாழ்வு குறித்த கண்ணோட்டத்தில், இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொணரும் எனவும், தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் உருகுவாய் ஆயர்கள்.
நோயின் காரணமாக, ஒருவரது வாழ்வு, வாழத் தகுதியற்றதாக மாறுகிறது என்றும், அவர் மாண்புடன் இறப்பதே மேல் என்றும் கூறப்பட்டுவருவது, தவறான கருத்து எனவும் கூறியுள்ளனர், உருகுவாய் ஆயர்கள்.

கருணைக்கொலையும், தற்கொலைக்கு உதவி புரிவதும் தவறு
நோயின் காரணமாக, ஒருவரது வாழ்வு, வாழத் தகுதியற்றதாக மாறுகிறது என்றும், அவர் மாண்புடன் இறப்பதே மேல் என்றும் கூறப்பட்டுவருவது, தவறான கருத்து - உருகுவாய் ஆயர்கள்
29 June 2020, 14:22