தேடுதல்

Vatican News
ஈராக் கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ ஈராக் கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ  (ANSA)

துருக்கியின் நடவடிக்கை குறித்து ஈராக் கர்தினால்

கர்தினால் சாக்கோ : குர்திஸ், மற்றும், கல்தேய கிறிஸ்தவர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள ஈராக்கின் எல்லைப்பகுதியை துருக்கி இராணுவம் குண்டுவீசி தாக்கியுள்ளது குழப்பம் தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஈராக்கின் குர்திஸ்தான் நிலப்பகுதியில் துருக்கி இராணுவம் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது, மிகுந்த கவலை தருவதாகவும், என்ன நோக்கத்திற்காக இது நடத்தப்பட்டது என்பது புரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார், ஈராக் கர்தினால் லூயிஸ் ரபேல் சாக்கோ.
பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் ஈராக் நாட்டிற்கு எதிராக துருக்கி எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்தும், பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் பெருபான்மையாக வாழும் எல்லைப்பகுதியில், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்ட கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும்தந்தை, கர்தினால் சாக்கோ அவர்கள், குறைந்தபட்சம் 5 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளது, மற்றும், பலர் தங்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது குறித்தும் எடுத்துரைத்தார்.
குர்திஸ், மற்றும், கல்தேய கிறிஸ்தவர்களை பெரும்பான்மையினராகக் கொண்டு, இரண்டு இலட்சம் மக்களே வாழும் ஈராக்கின் எல்லைப்பகுதியை துருக்கி இராணுவம் குண்டுவீசி தாக்கியுள்ளது குழப்பமாகவே உள்ளது எனவும் கூறினார் கர்தினால் சாக்கோ.
குர்திஸ் பகுதியின் தொழிலாளர் கட்சியின் தளங்களைத் தாக்கும் நோக்கத்தில் துருக்கி செயல்பட்டாலும், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பது கவலை தருகிறது என கூறும் அரசியல் விமர்சகர்கள், இந்த தாக்குதல்களால், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதி முயற்சிகள் பின்னடைவைக் காணும் ஆபத்து இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். (Fides)
 

23 June 2020, 13:14