தேடுதல்

Vatican News
சிரியாவின் மாரனைட் வழிபாட்டு முறை ஆயர் ஜோசப் டோப்ஜி.(இடது புறம்) சிரியாவின் மாரனைட் வழிபாட்டு முறை ஆயர் ஜோசப் டோப்ஜி.(இடது புறம்) 

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, சாத்தானின் தூண்டுதல்

"சிரியாவில் குண்டுகள் விழுந்தபோது, எங்கள் வாழ்வு, தற்போதுள்ள வாழ்வைக் காட்டிலும் சிறிது மேம்பட்டிருந்தது" என்று சிரியாவில் தற்போது வாழும் மக்கள் கூறுமளவு, துன்பங்களில் சிக்கியுள்ளனர் - ஆயர் ஜோசப் டோப்ஜி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"சிரியாவில் குண்டுகள் விழுந்தபோது, எங்கள் வாழ்வு, தற்போதுள்ள வாழ்வைக் காட்டிலும் சிறிது மேம்பட்டிருந்தது" என்று சிரியாவில் தற்போது வாழும் மக்கள் கூறுமளவு, துன்பங்களில் சிக்கியுள்ளனர் என்று, அந்நாட்டின் மாரனைட் வழிபாட்டு முறை ஆயர் ஜோசப் டோப்ஜி (Joseph Tobji) அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார்.

சிரியாவின் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை இன்னும் கடினமாக்கும் நோக்கத்தில், அமெரிக்க ஐக்கிய நாடு, "Caesar Act" என்ற கூடுதல் தடையை, ஜூன் 17 இப்புதனன்று, அந்நாட்டின்மீது சுமத்தியதையடுத்து, ஆயர் டோப்ஜி அவர்கள் இவ்வாறு கூறினார்.

சிரியாவின் உள்நாட்டுப் போரின்போது, குண்டுகள் வீழ்ந்த வேளையில், அவை ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே பாதித்தன என்றும், தற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் பொருளாதாரத் தடை, நாடு முழுவதையும் செயலிழக்கச் செய்துள்ளது என்றும் ஆயர் டோப்ஜி அவர்கள் மிகுந்த வேதனையை வெளியிட்டார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள "Caesar Act" என்ற தடை, இராணுவத்தினரை குறிவைத்து சுமத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு பாராளுமன்றம் கூறினாலும், அவர்கள் சொல்வது ஒரு பொய் என்பதை, சிரியாவில் வாழும் குழந்தையும் அறியும் என்று கூறிய ஆயர் டோப்ஜி அவர்கள், இது, சிரியா நாட்டை முற்றிலும் அழிப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள ஓர் ஏவுகணை என்று கூறினார்.

உள்நாட்டு போரினால் காயப்பட்டிருக்கும் சிரியா நாட்டில் தற்போது கோவிட் 19ன் நெருக்கடி மேலும் பல இழப்புக்களை உருவாக்கியுள்ள வேளையில், தற்போதைய அரசின் மீது மக்கள் முழுமையான வெறுப்பு கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் விதிக்கப்பட்டுள்ள "Caesar Act" என்ற பொருளாதாரத் தடை, உண்மையிலேயே சாத்தானின் தூண்டுதலாக உள்ளது என்று மாரனைட் ஆயர் ஜோசப் டோப்ஜி அவர்கள் பீதேஸ் செய்தியிடம் கூறினார். (Fides)

18 June 2020, 13:45