தேடுதல்

Vatican News
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் - மத்தேயு 10:42 இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் - மத்தேயு 10:42 

பொதுக்காலம் 13ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிப்போரை வரவேற்கும் மனதை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் 13ம் ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

இந்தியாவிலும், இலங்கையிலும், பயணங்கள் மேற்கொள்ளும் அயல்நாட்டவர், நாம் வழங்கும் வரவேற்பினால் பிரமிப்படைவதைக் காணலாம். நமது வரவேற்பையும், விருந்தோம்பலையும் பற்றி அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியபிறகும் பேசிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். நமது கலாச்சாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் விருந்தோம்பல் பண்பு, அண்மைய ஆண்டுகளில், தேய்ந்து, மறைந்து வருவது, மனதை பாரமாக அழுத்துகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக, கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி, அழையாத ஒரு விருந்தினராக வந்து, நம் நாடுகளிலும், நகரங்களிலும் தங்கிவிட்டதால், நமது விருந்தோம்பல் பண்பு காயப்பட்டிருப்பதை நாம் உணர்கிறோம். இத்தகையச் சூழலில், விருந்தோம்பலைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு, நம்மை அழைக்கிறது.

இந்தியப் பாரம்பரியத்தில், விருந்தினருக்கு உயர்ந்த மரியாதை வழங்கப்பட்டது. 'Atithi Devo Bhava' என்ற சொற்கள், இந்திய வேத நூல்களில் காணப்படுகின்றன. இதன் பொருள்: "விருந்தினர், கடவுளுக்குச் சமமானவர்". இதையொத்த எண்ணத்தை, 'விருந்தோம்பல்' என்ற பிரிவில் திருவள்ளுவர் இவ்வாறு கூறியுள்ளார்:

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்தவர்க்கு.

அதாவது, நாள் முழுவதும் விருந்தினரை உபசரித்து வழியனுப்பி, அடுத்த விருந்தினரை எதிர்பார்த்து காத்திருப்போர், வானவர் மத்தியில் நல்ல விருந்தினர் ஆவார் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.

வந்திருக்கும் விருந்தினர் வானவராவதும், விருந்தினரை வரவேற்று, உபசரிப்பவர்கள், வானவர் நடுவே விருந்தினராவதும், விருந்தோம்பலின் அழகான விளைவுகள். இக்கருத்துக்களை வலியுறுத்தும் வகையில், இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியின் இறுதிப் பகுதியும் அமைந்துள்ளன.

சூனேம் நகரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், இறைவாக்கினர் எலிசாவை வரவேற்று, உபசரித்ததை இன்றைய முதல் வாசகம் (2 அரசர் 4:8-11, 14-16) விவரிக்கின்றது. உணவு படைப்பதோடு துவங்கும் இந்த உபசரிப்பு, இறைவாக்கினர் வந்து தங்குவதற்கு உறைவிடம் உருவாக்கித்தரும் முயற்சியாக வளர்கிறது. அதுவும், சூனேம் நகரப் பெண்மணி, இறைவாக்கினருக்கென தன் வீட்டின் மேல்தளத்தில் புதிதாக அறை ஒன்றைக் கட்டி, அதை அவருக்கென ஒதுக்கி வைப்பதை இன்றைய வாசகம் விவரிக்கிறது. அப்பெண், மாடியில் அறையைக் கட்டி, அதில் இறைவாக்கினரைத் தங்கவைத்ததைக் குறித்து, விவிலியப் பேராசிரியர், அருள்பணி முனைவர் இயேசு கருணா அவர்கள் பகிர்ந்துகொள்ளும் எண்ணங்கள் அழகானவை:

மாடியறை நிறைவான தனிமையை நமக்கு தருகிறது. தெருவில் போவோர், வருவோர், மாடியறையைத் தட்டுவதில்லை. மாடியறையில் பக்கத்துவீட்டுக்காரர்கள் தொல்லையில்லை. மாடிவீடு நம்மை மேலே உயர்த்தி வைப்பதால், நாம் எல்லாரையும் விட பெரியவர் என்ற பெருமித உணர்வை நமக்குத் தருவதோடு, நம்மைக் கடவுளுக்கும் நெருக்கமாக்குகிறது. இன்னும் முக்கியமாக, மாடியறைக்கான வழி, வீட்டுக்குள்ளே இருப்பதால், மாடியறைக்கான உரிமை, வீட்டு உரிமையாளர்களுக்கும், மிக நெருக்கமானவர்களுக்கும் தவிர, வேறு யாருக்கும் வழங்கப்படுவதில்லை. இவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சூனேம் நகரத்துப் பெண், தன்னிடம் இருந்த மிகச் சிறந்ததை இறைவாக்கினர் எலிசாவுக்குக் கொடுக்கின்றார் என்பதை உணர்கிறோம்.

இத்தகைய விரும்தோம்பலால் உள்ளம் நிறைவடைந்த இறைவாக்கினர் எலிசா, குழந்தைப்பேறு இன்றி தவித்த சூனேம் நகரப் பெண்ணுக்கு குழந்தை வரம் கொடுக்கும் ஆசீரோடு இன்றைய முதல் வாசகம் நிறைவு பெறுகிறது. விருந்தோம்பல் நிகழும்போது, அதனைத் தருவோரும், பெறுவோரும் ஆசீர்வாதங்களால் நிறைவர் என்பதை இவ்வாசகத்தின் வழியே நாம் புரிந்துகொள்கிறோம்.

ஒருவரை ஏற்றுக்கொள்பவர், அதாவது வரவேற்று, உபசரிப்பவர், தகுந்த பலனைப் பெறுவார் என்பதை, இன்றைய நற்செய்தியில், இயேசு, ஓர் உறுதிமொழியாக வழங்குகிறார்.

இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள நற்செய்தி, மத்தேயு பத்தாம் பிரிவின் இறுதிப் பகுதி. இயேசு, திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து, பணியாற்ற அனுப்பியபோது, அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகள், இப்பிரிவில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. நோய்களைக் குணமாக்கவும், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யவும், பேய்களை ஓட்டவும் (மத். 10:8) அதிகாரங்களை வழங்கும் சக்திமிகுந்த சொற்களுடன், இயேசுவின் அறிவுரை ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து, தன் சீடர்கள் சந்திக்கப்போகும் ஆபத்துக்களைக் குறித்து இயேசு வழங்கும் எச்சரிக்கைகள், இப்பிரிவின் அடுத்தப் பகுதியாக அமைந்துள்ளன. (மத். 10: 16-32). இந்த எச்சரிக்கைகளின் ஒரு பகுதியை, நாம் சென்ற ஞாயிறு, நற்செய்தியாகக் கேட்டோம்.

சீடர்கள் சந்திக்கவிருக்கும் ஆபத்துக்களை, மூடி மறைக்காமல் தெளிவாகக் கூறிய இயேசு, இப்பிரிவின் இறுதிப் பகுதியில், இன்னும் சில சவால்களை, சீடர்கள் முன் வைக்கிறார். அதுவே, இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகளாக ஒலிக்கின்றது. "தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்" (மத். 10:38) என்ற தெளிவான சவாலை விடுக்கும் இயேசு, கனிவு ததும்பும் சொற்களுடன் தன் அறிவரையை நிறைவு செய்கிறார்:

மத்தேயு 10: 40-42

உங்களை ஏற்றுக்கொள்பவர், என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ, என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை, அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர், இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை, அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர், நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு, அவர் என் சீடர் என்பதால், ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும், தம் கைம்மாறு பெறாமல் போகார் என, உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

'ஏற்றுக்கொள்ளுதல்', அதாவது, 'வரவேற்று உபசரித்தல்', 'ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுத்தல்' என்ற எண்ணங்களையெல்லாம் இயேசு தன் சீடர்களிடம் கூறியபோது, தனது பணிவாழ்வில் கிடைத்த விருந்தோம்பலை அவர் உள்ளம் அசைபோட்டிருக்க வேண்டும். மார்த்தா, மரியா, இலாசர் ஆகிய நண்பர்களிடையே அவர் பெற்ற வரவேற்பு, கானா திருமண விருந்து, தொழுகைக்கூடத் தலைவன் வீட்டில் கிடைத்த விருந்து, சமாரியப் பெண் தந்த குளிர்ந்த நீர்... இவை அனைத்தும் இயேசுவின் உள்ளத்தில் தோன்றியிருக்கும். தனக்குக் கிடைத்த விருந்தோம்பல் அனுபவங்கள் தன்னை வளமடையச் செய்துள்ளதுபோலவே, தன் சீடர்களின் வாழ்வையும் வளமையாக்கும் என்பதை இன்றைய நற்செய்தியில் இயேசு உறுதியுடன் கூறுகிறார். அத்துடன், தன் சீடர்களுக்கு வரவேற்பளிக்கும் மக்களும், தகுந்த பலனைப் பெறுவர் என்பதையும், இயேசு தெளிவுடன் கூறியுள்ளார்.  

இயேசு சொல்லித்தந்த விருந்தோம்பலும், வரவேற்பும், ஆதிக் கிறிஸ்தவர்கள் நடுவே நிலவிய அடித்தளமான அனுபவம் என்றால், அது மிகையல்ல. கிறிஸ்தவ மறையை இத்தனை நூற்றாண்டுகளாக வாழவைத்ததன் ஒரு முக்கிய காரணம், ஆதி கிறிஸ்தவர்கள், மற்றும், ஏனைய நல்ல உள்ளங்கள், சீடர்களுக்குத் தந்த வரவேற்பும், விருந்தோம்பலும். இந்த வரவேற்பு இன்றி, கிறிஸ்தவ மறை உயிர் வாழ்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். கிறிஸ்துவின் சீடர்கள், ஊர், ஊராக, அல்லது, நாடுவிட்டு நாடு சென்றபோது, அவர்களை வேட்டையாடி, கொல்வதற்கு, பல்வேறு குழுக்கள் இருந்தாலும், அவர்களை வரவேற்பதற்கு ஒரு சில இல்லங்கள் திறந்திருந்தன. இந்த இல்லங்களில், சீடர்களுடன் கூடிய மக்கள் நடுவே, நற்செய்தி பகிர்ந்துகொள்ளப்பட்டது; இயேசுவின் இறுதி உணவு, நினைவுகூரப்பட்டது. ஆழமாகச் சிந்தித்தால், சீடர்களை வரவேற்ற இந்த இல்லங்களே, முதல் ஆலயங்களாக விளங்கின.

உரோமையப் பேரரசன் கான்ஸ்டன்டைன், 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட பின்னரே, கிறிஸ்தவர்களின் வழிபாட்டிற்கென, ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதுவரை, கிறிஸ்தவர்கள், மறைவிடங்களில், பூமிக்கடியில், இரகசியமாக கூடி வழிபட்டனர் என்பதை அறிவோம். முதல் மூன்று நூற்றாண்டுகள், சாதாரண மக்கள் வாழ்ந்த இல்லங்களே, கிறிஸ்தவ மறையை வளர்த்த நாற்றங்கால்களாய் விளங்கின. அத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில், கிறிஸ்தவர்களிடையே நிலவிய வரவேற்பு, விருந்தோம்பல், பகிர்தல் ஆகிய பண்புகளே, கிறிஸ்தவம் நோக்கி மக்களை ஈர்த்தன.

இன்று கிறிஸ்தவ விருந்தோம்பலின் நிலை என்ன? பொதுவாக, இவ்வுலகில் விருந்தோம்பல் என்ற பண்பு குறைந்து, மறைந்துவருவது போலவே, கிறிஸ்தவ சமுதாயங்களிலும் மறைந்துவருகின்றது. இன்று, உலகெங்கும், நகரங்களில் வாழும் ஒவ்வொருவர் இல்லமும், பல்வேறு பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட அரணாக மாறியுள்ளது. அயலவர்மீது அச்சமும், சந்தேகமும் அதிகரித்துவிட்டதால், வரவேற்பு, விருந்தோம்பல், ஆகிய அழகிய அம்சங்கள், காற்றோடு கரைந்துவிட்டன. நமது சுயநல நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதால், 'தவித்த வாய்க்குத் தண்ணீர் தரும்' அடிப்படை ஈரமும் நமக்குள் வறண்டு வருவதை உணர்கிறோம்.

அயலவரை, உறவினரை முகமுகமாய் சந்திப்பது ஆபத்து என்பதால், கருவிகளின் துணையை நாடுகிறோம். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தொடர்புசாதனக் கருவிகள், தூரங்களை அழித்துவிட்டன என்று பெருமைப்படுகிறோம். ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் இருப்போரையும், நம் கருவிகள் வழியே சந்தித்து, கைகுலுக்கும் அளவுக்கு, நம் தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ந்துவிட்டது என்றும் பெருமைப்படுகிறோம். இவ்வுலகத் தொடர்புகள் போதாதென்று, விண்வெளியில் உள்ள கோளங்களையும் தொட்டுவிடுமளவு நம் தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டன.

2015ம் ஆண்டு, ஜூலை மாதம், அமெரிக்க ஐக்கிய நாட்டின் விண்வெளி ஆய்வு மையம், NASA ஏவிய ஒரு விண்கலம், சூரியக் குடும்பத்தின் எல்லையில் சுற்றிவரும் கோளமான புளூட்டோவை நெருங்கி, அங்கிருந்து தெளிவான புகைப்படங்களை அனுப்பியது. 2006ம் ஆண்டு, சனவரி மாதம், விண்ணில் ஏவப்பட்ட 'புதியத் தொடுவானங்கள்' (New Horizons) என்ற இந்த விண்கலம், மணிக்கு, ஏறத்தாழ 50,000 கி.மீ. வேகத்தில் 9 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, சூரியக் குடும்பத்தின் தூரத்து உறவினரைத் தொட்டுவிட்டது. பூமிக்கும், புளுட்டோவுக்கும் இடையே உள்ள தூரம் ஏறத்தாழ 600 கோடி கி.மீட்டர்கள் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் 600 கோடி கி.மீட்டர்களைக் கடந்து, புளுட்டோவைத் தொட்டுவிட வழிகளை கண்டுபிடித்த நாம், பக்கத்து வீட்டாரைத் தொட்டுவிட, அவர்களை வரவேற்க வழிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் எழுகிறது. விண்வெளியை வெல்லும் நாம், நம் மனவெளியை வெல்ல முடியவில்லையே என்ற நெருடல் எழுகிறது.

"நமது காலத்தின் முரண்பாடு" (The Paradox of Our Time) என்ற தலைப்பில், Bob Moorehead என்பவர் எழுதிய வரிகள், இந்த நெருடலை வெளிப்படுத்துகின்றன. 1995ம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் குறுங்கட்டுரையில், இடம்பெறும் வார்த்தைகள், இன்று நமக்கு முன் கேள்விகளைத் தொடுக்கின்றன:

பெரும் முயற்சிகள் எடுத்து, விண்வெளியைக் கடந்து, நாம் நிலவைத் தொட்டுவிட்டு வந்துள்ளோம்; ஆனால், தெருவைக் கடந்து, அடுத்த வீட்டுக்காரரைச் சந்திக்க, நாம் தயங்குகிறோம். விண்வெளியை வென்றுவிட்டோம், ஆனால், ஆழ்மன வெளியை வெல்லவில்லை.

இந்திய, இலங்கை கலாச்சாரத்தின் ஆணிவேர்களில் ஒன்றாக திகழும் விருந்தோம்பல் பண்பை நாம் மீண்டும் உயிர்பெற்றெழச் செய்யவேண்டும். கோவிட்-19 தொற்றுக்கிருமியின் தாக்கம் குறைந்து, நாம் மீண்டும் இயல்பு வாழ்வைத் தொடரும் வேளையில், இந்தக் கொள்ளைநோயின் தாக்கத்தால் அனைத்தையும் இழந்து தவிப்போரை வரவேற்கும் மனதை இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்று மன்றாடுவோம். நாம் வரவேற்கும் அந்த விருந்தினர்கள் நடுவே, வானதூதர்களும், இறைவாக்கினர்களும் இருக்கக்கூடும். அவர்களை வரவேற்பதால், நம் இல்லங்கள் ஆசீரால் நிறைவனவாக!

27 June 2020, 12:02