தேடுதல்

Vatican News
பத்திரிகையாளர் சந்திப்பில் கர்தினால் இரஞ்சித் பத்திரிகையாளர் சந்திப்பில் கர்தினால் இரஞ்சித்   (AFP or licensors)

கோவில் வழிபாடுகள் துவக்கப்பட விண்ணப்பம்

கர்தினால் இரஞ்சித் : கோவிட்-19 நோய்க் காலத்தில், அரசின் அனைத்து விதிகளையும் செயல்படுத்திய தலத்திருஅவை, தற்போது, அரசின் வழிகாட்டுதல்களுடனும், கட்டுப்பாடுகளுடனும், கோவில்களைத் திறக்க காத்திருக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய், இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுவரும் இவ்வேளையில், நலஆதரவுத் தொடர்புடைய வழிகாட்டுதல்களுடன், கத்தோலிக்கக் கோவில்கள், வழிபாடுகளுக்கென திறக்கப்பட அனுமதிக்கப்படவேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார், அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித்.

இலங்கையில் கோவிட்-19 கொள்ளைநோய் தீவிரமடைந்திருந்த காலத்தில், மார்ச் 15ம் தேதி முதல் அனைத்து வழிபாடுகளையும் நிறுத்திவைத்து, தவக்கால வழிபாடுகளையும், உயிர்ப்புக் கொண்டாட்டங்களையும் நடத்தமுடியாமல் இருந்த தலத்திருஅவை, தற்போது, நிலைமைகள் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், கோவில்களை திறக்க அனுமதிக்குமாறு அரசை விண்ணப்பித்துள்ளது.

ஜூன் 7, இஞ்ஞாயிறன்று, காணொளி வழியாக, விசுவாசிகளுக்கு, திருப்பலியை நிறைவேற்றிய கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித் அவர்கள், திருப்பலியின்போது, இந்த அழைப்பை அரசுக்கு விடுத்தார்.

கோவிட்-19 நோய்க் காலத்தில் அரசின் அனைத்து விதிகளையும் செயல்படுத்திய தலத்திருஅவை, தற்போது, அரசின் வழிகாட்டுதல்களுடனும், கட்டுப்பாடுகளுடனும், கோவில்களைத் திறக்க காத்திருக்கிறது என்று கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், மத வழிபாடுகளை துவக்க, அனைத்து மதங்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என, அரசிடம் விண்ணப்பித்தார்.

ஜூன் 7 வரையுள்ள புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் இதுவரை 1,835 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 883 பேர் மருத்துவ மனைகளில் சிகிசை பெற்றுவரும் வேளையில், 941 பேர் முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். (UCAN)

 

08 June 2020, 14:20