தேடுதல்

Vatican News
ஆப்பிரிக்க ஆயர்கள் ஆப்பிரிக்க ஆயர்கள் 

கோவிட்-19 காலத்தில் வன்முறைகளும் அதிகரித்துள்ளது

பாலின அடிப்படையிலான வன்முறைகளையும், பெண் கொலைகளையும் முடிவுக்குக் கொண்டு வர, அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் - தெற்கு ஆப்ரிக்க ஆயர்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கோவிட்-19 தொற்று நோய் கட்டுப்பாடுகள் நிறைந்த இந்த காலத்தில், பாலின அடிப்படையிலான வன்முறைகளும், பெண் கொலைகளும் அதிகரித்திருப்பது குறித்து தங்கள் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் தெற்கு ஆப்ரிக்க கத்தோலிக்க ஆயர்கள்.
தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின், நீதி மற்றும் அமைதி அவை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயும், அதையொட்டிய கட்டுப்பாடுகளும் அதிகரித்துவரும் அதேவேளையில், வன்முறைகளும் பெண்கொலைகளும் அதிகரித்துவருவது கவலை தருவதாக உள்ளது என கூறியுள்ளனர்.
கோவிட் -19 நோய் பரவலுக்கு எதிராக அரசுத்துறைகளும், தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து உழைத்துவருவதுபோல், பாலின அடிப்படையிலான வன்முறைகளையும், பெண் கொலைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும் அனைத்து சமுதாயங்களும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என தெற்கு ஆப்ரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் நடத்தும் வன்முறைகளைக் கண்டிக்கும் திருஅவை, அவ்வன்முறைகளை அகற்ற அனைத்துத் துறையினருடனும் இணைந்து, தொடர்ந்து உழைக்கும் என்ற உறுதியையும், தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது, ஆயர்களின் நீதி மற்றும் அமைதி அவை.
கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடு காலத்திற்கு முன்னரே, குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்டிருந்த தெற்கு ஆப்ரிக்க நாடுகளில், தற்போது, பாலின அடிப்படியிலான வன்முறைகளும், பெண்கொலைகளும் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. (Fides)
 

30 June 2020, 13:57