தேடுதல்

Vatican News
எல் சல்வதோரில் 6 இயேசு சபையினர் கொல்லப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவையொட்டி 800க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று வரைந்த இயேசு சபையினரின் ஓவியங்கள் எல் சல்வதோரில் 6 இயேசு சபையினர் கொல்லப்பட்டதன் 30ம் ஆண்டு நிறைவையொட்டி 800க்கும் மேற்பட்டோர் பங்குபெற்று வரைந்த இயேசு சபையினரின் ஓவியங்கள்  (ANSA)

நீதிக்காக முப்பது ஆண்டுகள் காத்திருப்பு

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எல் சால்வதோர் நாட்டில் இராணுவத்தால் இயேசு சபையினர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைகள் தற்போது மீண்டும் துவக்கம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள் 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், எல் சால்வதோர் நாட்டில், இராணுவத்தால் கொல்லப்பட்ட இயேசு சபையினருக்கு நீதி கிடைப்பதற்காக நடத்தப்பட்ட தொடர் முயற்சிகள், பல தடைகளைத் தாண்டி, ஜூன் 08, இத்திங்களன்று, தன் விடிவைக் காணத் துவங்கியுள்ளன.

எல் சால்வதோர் நாட்டு தலைநகர் சான் சால்வதோரில் இயேசு சபையினரால் நடத்தப்படும் மத்திய அமெரிக்க பல்கலைக்கழகத்திற்குள், 1989ம் ஆண்டு, நவம்பர் மாதம் 16ம் தேதி அதிகாலையில் நுழைந்த அந்நாட்டு இராணுவத்தினர்,  ஆறு இயேசு சபை அருள்பணியார்களையும், அவர்களது இல்லத்தின் பணியாளரையும், அப்பணியாளரின் 15 வயது மகளையும் படுகொலை செய்தனர்.

கொலை நடந்த ஒன்றரை மாதங்கள் வரை, அதற்கான பொறுப்பை ஏற்றுகொள்ள மறுத்துவந்த எல் சால்வதோர் அரசு, நான்கு ஆண்டுகளாக கொலையாளிகளைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்ததுடன், 1993ம் ஆண்டின் பொது மன்னிப்பின்கீழ் அவர்கள் மீது வழக்குப் போடுவதை தடைசெய்தது.

இயேசு சபையினர் கொல்லப்பட்டதில், இராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசு உயர்பதவியில் இருப்போருக்கும் தொடர்பு உண்டு என ஆதாரங்களையும், பெயர்களையும், உண்மையைக் கண்டறியும் அமெரிக்க கண்டத்தின் அவை, 1993ம் ஆண்டு வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்த பொது மன்னிப்பை வழங்கி, கொலையாளிகளைக் காப்பாற்றிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மனித உரிமை நடவடிக்கையாளர்களால் தொடர்ந்து இடம்பெற்ற போதிலும், 30 ஆண்டுகளுக்குப்பின் தற்போதுதான் நம்பிக்கை ஒளி பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல் சால்வதோர் அரசு அதிகாரிகளுக்கு எதிரான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கொலையுண்ட 6 இயேசு சபை அருள்பணியாளர்களுள் ஐந்து பேர் இஸ்பானிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் உறவினர்களின் விண்ணப்பத்தின்பேரில் இஸ்பெயின் தலைநகரில், இந்த வழக்கு விசாரணைகள், ஜூன் 8, இத்திங்களன்று, துவக்கப்பட்டுள்ளன.

ஒரு நாட்டின் மனித உரிமை மீறல் குற்றங்களை இன்னொரு நாட்டில் விசாரிக்கலாம் என்ற அனைத்துலக நீதி கண்காணிப்பு விதிகளின்கீழ், இந்த விசாரணைகள் இஸ்பெயின் நாட்டில் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

கொலையுண்ட இயேசு சபை அருள்பணியாளர்கள், இஸ்பானிய நாட்டைச் சேர்ந்த Ignacio Ellacuría, Ignacio Martín-Baró, Amando López, Juan Ramón Moreno, Segundo Montes, எல் சால்வதோரின் Joaquín López y López, மற்றும், இரு பொதுநிலையினர்.

இவர்கள் பணியாற்றிவந்த  மத்திய அமெரிக்க பல்கலைக்கழகம், 1965ம் ஆண்டு, இயேசு சபையினரால் துவக்கப்பட்டு நடத்தப்பட்டுவரும், இலாப நோக்கமற்ற ஒரு பல்கலைக்கழகமாகும். (ICN)

09 June 2020, 13:30