தேடுதல்

Vatican News
ரிக்சா ஓட்டுனர்களுக்கு உதவி வழங்கிய இராஞ்சி உயர் மறைமாவட்டம் ரிக்சா ஓட்டுனர்களுக்கு உதவி வழங்கிய இராஞ்சி உயர் மறைமாவட்டம்  

ரிக்ஸா ஓட்டுனர்களுக்கு உதவிய இராஞ்சி உயர் மறைமாவட்டம்

முழு அடைப்பு காலத்தில், ரிக்சா ஓட்டுனர்களுக்கு, இராஞ்சி உயர் மறைமாவட்டம், ஜூன் 7, மூவொரு இறைவன் பெருவிழாவன்று, உணவும், மருத்துவ உதவிகளும் வழங்கியுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் 19 தொற்றுக்கிருமியினால் சுமத்தப்பட்டுள்ள முழு அடைப்பு காலத்தில் துன்புறுவோரில் ஒரு பகுதியினரான, ரிக்சா ஓட்டுனர்களுக்கு, இராஞ்சி உயர் மறைமாவட்டம், ஜூன் 7, மூவொரு இறைவன் பெருவிழாவன்று, உணவும், மருத்துவ உதவிகளும் வழங்கியுள்ளது.

1000த்திற்கும் அதிகமான ரிக்ஸா ஓட்டுனர்களுக்கு, இராஞ்சி லொயோலா வளாகத்தில், பேராயர் ஃபீலிக்ஸ் டோப்போ அவர்கள் இந்த உதவிகளை வழங்கிய வேளையில், 70 நாள்களாக பணியேதும் இன்றி தவிக்கும் இத்தொழிலாளிகளின் வேதனையை சமுதாயம் உணரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சாதி, மதம், இனம் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி, இந்த உதவிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன என்று, இவ்வுயர் மறைமாவட்டத்தின் துணை ஆயர், தியடோர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

இராஞ்சி உயர் மறைமாவட்டத்தில் உழைத்துவரும் புனித அன்னம்மா, புனித அன்னை தெரேசா ஆகிய துறவு சபைகளின் அருள் சகோதரிகளும், கத்தோலிக்க தன்னார்வத் தொண்டர்களும், இந்த முழு அடைப்பு காலத்தில், நகரின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொரு நாளும், உதவிகள் வழங்கிவருகின்றனர் என்று இம்மறைமாவட்டம் கூறியுள்ளது.

இதேவண்ணம், இலங்கையில் நலிவுற்ற மக்களுக்கு, உணவு, மருத்துவ உதவிகள் ஆகியவற்றை, அந்நாட்டு காரித்தாஸ் அமைப்பு, நாட்டின் பல்வேறு நகரங்களில் வழங்கி வருவதாக, இவ்வமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அருள்பணி மஹேந்திர குணதிலக்கே அவர்கள் கூறியுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில், 16 விழுக்காட்டினர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், அவர்கள் இந்நோயின் தாக்குதலுக்கு எளிதில் இலக்காக வாய்ப்புக்கள் அதிகம் என்பதாலும், அவர்களைக் கண்காணிக்கும் வழிமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

10 June 2020, 15:45