தேடுதல்

Vatican News
பங்களாதேஷிற்கும் மியான்மாருக்கும் இடையே குடிபெயரும் புலம்பெயர்ந்தோர் பங்களாதேஷிற்கும் மியான்மாருக்கும் இடையே குடிபெயரும் புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

புகலிடம் தேடுவோருக்கு எதிரான இனப்பாகுபாடுகள் நிறுத்தப்பட

கர்தினால் போ : மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்படுவது தொடருமானால், இந்த உலகம் பெரும் நெருக்கடியை சந்திக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
புகலிடம் தேடுவோருக்கு எதிராக எழும் இனப்பாகுபாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார், மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் போ.
இன்றைய உலகில், புலம்பெயர்ந்தோரும், புகலிடம் தேடுவோரும் எதிர்கொள்ளும் இனப்பாகுபாடு, பகைமை உணர்வுகள் போன்றவற்றைக் களைந்து, அனைவரின் உரிமைகளும் மதிக்கப்பட, நாடுகள் உறுதியை வழங்கவேண்டும் என்று கூறிய ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவர், கர்தினால் போ அவர்கள், வேறு இடங்களுக்கு கட்டாயமாக புலம்பெயர தள்ளப்படும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட, அனைத்துலக அளவில், சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
மக்கள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்படுவது தொடருமானால், இந்த உலகம் பெரும் நெருக்கடியை சந்திக்கும் என்ற எச்சரிக்கையையும் முன்வைத்த கர்தினால், இந்த கொரோனா தொற்றுநோய் காலத்தில் புலம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
கோவிட்-19 தொற்றுநோயை காரணம் காட்டி, சில ஆசிய நாடுகள், புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைப்பது, மற்றும், அவர்களுக்குரிய உதவிகளை வழங்க மறுப்பது குறித்தும், தன் கவலையை வெளியிட்டார், கர்தினால் போ.
நலவாழ்வுத் தொடர்புடைய இன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, முதலில் இந்நோயால் உருவாக்கப்பட்டுள்ள பசி, மற்றும், ஏழ்மைக்கு முடிவு காண்பதுடன், மக்களை பலவந்தமாக குடிபெயர வைக்கும் நிலைகளும், ஆயுத மோதல்களும் நிறுத்தப்பட்டு, மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடிபெயர அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார், யாங்கூன் கர்தினால்.
மியான்மார் நாட்டிற்குள்ளேயே 3,50,000த்திற்கும் அதிகமானோர், புலம்பெயர்ந்தவர்களாக, முகாம்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இன்றைய உலகில், 7 கோடியே 95 இலட்சம் பேர் குடிபெயர்ந்தவர்களாக வாழ்கின்றனர், இது, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த எண்ணிகையைவிட இரு மடங்காகும்.( UCAN)
 

22 June 2020, 12:51