தேடுதல்

Vatican News
பிலிப்பீன்சில் புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு எதிர்ப்பு பிலிப்பீன்சில் புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு எதிர்ப்பு 

பிலிப்பீன்ஸ் - புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு எதிர்ப்பு

மனிலா உயர்மறைமாவட்ட நிர்வாகி ஆயர் Broderick Pabillo, San Carlos மறைமாவட்ட ஆயர் Gerardo Alminaza உட்பட, பிலிப்பீன்சின் தேசிய கிறிஸ்தவ சபைகள், துறவு சபைகளின் தலைவர்கள் போன்றோர், புதிய சட்ட வரைவுக்கு எதிரான அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பிலிப்பீன்ஸ் நாட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதச் சட்டவரைவு, மனித உரிமைகள் மற்றும், பொதுமக்களின் சுதந்திரம் மதிக்கப்படுவதை அழித்தொழிக்கும் என்று, அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர். 

இந்த சட்ட வரைவு பரிந்துரைக்கும் நடவடிக்கைகள், பயங்கரவாதத்தை ஒழிக்க உதவும் என்று சட்ட அமைப்பாளர்கள் கூறியுள்ளவேளை, அந்நாட்டின் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிலிப்பீன்சின் முன்னாள் அரசுத்தலைவர் Ferdinand Marcos அவர்கள், 1972ம் ஆண்டு முதல், 1981ம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்திய இராணுவச் சட்டத்தின் இருண்ட நாள்களில் வீசிய துர்நாற்றமாக, இப்போதைய புதிய சட்ட வரைவு உள்ளது என்று, கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த புதிய பயங்கரவாத சட்ட வரைவு உடனடியாகச் சட்டமாக்கப்படுவது அவசரத் தேவையாக உள்ளது என்று, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், தனது காங்கிரஸ் அவை வழியாக துரிதப்படுத்திவருகிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

பிலிப்பீன்சின் கீழ்சபை, இந்த சட்டவரைவுக்கு, ஜூன் 3 இப்புதனன்று இசைவு தெரிவித்துள்ளது. செனட் அவையும் இதே மாதிரியான சட்டவரைவுக்கு, கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சட்டவரைவு எண் 6875 சட்டமாக்கப்பட்டால், பயங்கரவாதச் செயல்களோடு எந்த வழியிலும் தொடர்புடையவர்கள், பிணையல் இன்றி ஆயுள் தண்டனை விதிக்கப்படுவர்.   இச்செயல்கள் தொடர்பாக, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்படுபவர்கள், 24 நாள்களுக்கு, கைது வாரண்ட் இன்றி, தடுப்புக்காவலில் வைக்கப்படுவர். 

பிலிப்பீன்சின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐ.நா.

மேலும், ஜூன் 4, இவ்வியாழனன்று, ஐ.நா. நிறுவனத்தின் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வெளியிட்ட அறிக்கையில், பிலிப்பீன்சில் சட்டத்திற்குப் புறம்பே இடம்பெறும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்ட 2016ம் ஆண்டு முதல், இதுவரை, குறைந்தது 8,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால் உண்மையான எண்ணிக்கை, இதைவிட மூன்று மடங்கு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கோவிட்-19 கொள்ளைநோய் காலத்திலும், மற்ற உரிமை மீறல்கள் உட்பட, இத்தகைய கொலைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்று, ஐ.நா. அலுவலகம் கூறியுள்ளது.

பிலிப்பீன்ஸ் நாடு, ஏழ்மை, சமத்துவமின்மை, ஆயுதம் ஏந்திய மோதல்கள், அடிக்கடி இடம்பெறும் இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றால், பெரிய அளவில் சவால்களை எதிர்கொள்ளும்வேளை, அந்நாடு தற்போது கோவிட்-19 நோய் பரவலாலும் துன்புறுகின்றது என்று, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் Michelle Bachelet அவர்கள், கவலை தெரிவித்துள்ளார்.

அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் கடுமையாக இடம்பெறுகின்றன என்றும், இந்நடவடிக்கைகளில் தங்களின் உறவுகள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்பதற்கு, மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்துகொள்ளும் செய்திகள், மனதைப் பிழிகின்றன என்றும், Bachelet அவர்கள், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். (UN) 

05 June 2020, 12:41