தேடுதல்

Vatican News
புலம்பெயர்ந்தோர் புலம்பெயர்ந்தோர்  (ANSA)

கோவிட்19ஆல் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவில் பாதிப்பு

ஜூன் 21, ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாளில் நம்பிக்கை மற்றும், ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு, நியுசிலாந்து ஆயர்கள், கத்தோலிக்கருக்கு அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“உன் சகோதரன், சகோதரி எங்கே?” (தொ.நூ.4,9) என்ற தலைப்பில், இம்மாதம் 21ம் தேதி, ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதாக, நியுசிலாந்து கத்தோலிக்க ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இவ்வாண்டில், கோவிட்-19 கொள்ளைநோயால் உலகினர் பாதிக்கப்பட்டிருக்கும்வேளை, புலம்பெயர்ந்தோர் அனுபவிக்கும் துன்பங்களை நினைத்து, இந்நாளில் அவர்களுக்காகச் சிறப்பாக இறைவனை மன்றாடுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியின் மகிழ்வு என்று பொருள்படும் “Evangelii gaudium” என்ற திருத்தூது அறிவுரை மடலில் விடுத்துள்ள அழைப்பிற்கேற்ப,  புலம்பெயர்ந்த மக்களை, நம் சகோதரர், சகோதரிகளாக நோக்குமாறு, நியுசிலாந்து ஆயர்கள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்கிருமியால் உருவாக்கப்பட்டுள்ள நலவாழ்வு நெருக்கடியில், நலிவடைந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இக்கொள்ளைநோயால், புலம்பெயர்ந்தோரில் பத்துக்கு ஒருவர், நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் என்றும் ஆயர்கள் எடுத்துரைத்துள்ளனர்.   

ஜூன் 21, ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர் நாளில் நியுசிலாந்து கத்தோலிக்கர், நம்பிக்கை மற்றும், ஆர்வமுடன் பங்கெடுக்குமாறு ஆயர்களின் அறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.

12 June 2020, 14:05