தேடுதல்

Vatican News
இயேசுவின் தூய்மைமிகு இதயம் இயேசுவின் தூய்மைமிகு இதயம்  

நேர்காணல்: இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின் சிறப்புகள்

கிறிஸ்துவின் மனநிலை கொண்டுள்ள நாமும் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாய், பிறருக்கு இளைப்பாறுதல் தரும் இதயம் கொண்டவர்களாய் இருக்க; நமது தேவைகளை மட்டுமல்ல, பிறர் தேவைகளுக்குத் தேட அழைக்கப்பட்டிருக்கிறோம்!

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்கத் திருஅவை சூன் 19 கடந்த வெள்ளியன்று இயேசுவின் தூய்மைமிகு இதயப் பெருவிழாவையும், அதற்கு அடுத்த நாள் அன்னை மரியாவின் மாசற்ற இதய விழாவையும் சிறப்பித்தது. இவ்விரு திருஇதயங்கள் சபையைச் சார்ந்த அருள்பணி முனைவர் ஜோசப் ஆன்டனி ராஜா அவர்கள், இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின் சிறப்புகள் பற்றி இன்று நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். இவர், உரோம் நகரிலுள்ள அச்சபையின் தலைமையகத்தில், சபையின் பொருளாளராகப் பணியாற்றுகிறார். திருஇதயங்கள் சபை ஏறத்தாழ 39 நாடுகளில் மறைப்பணியாற்றி வருகிறது.

அருள்பணி முனைவர் ஜோசப் ஆன்டனி ராஜா

தூய பவுல் உரோமையருக்கு எழுதிய மடல் 5:5ல் கூறுகிறார்: “கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு, மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக!” கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டிருங்கள்! இயேசுவின் திருஇருதயத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயேசுவின் மனநிலை என்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் மத்தேயு நற்செய்தியில் (11:28-30) இயேசு தம் சீடர்களுக்குக் கூறுகிறார்: “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்று. இயேசு கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்; அவரது நுகம் அழுத்தாது! அவரது சுமை எளிதானது! அவர் இளைப்பாறுதல் தருகின்ற இதயம் படைத்தவர். கிறிஸ்துவின் மனநிலை இதுதான்: எல்லாரையும் விண்ணகத் தந்தையின் மக்களாகப் பார்த்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார்.

இயேசுவின் இதயம் கேட்கின்ற இதயம்:

தனது பயணத்தில் இயேசு நின்று பிறர் தேவையை கேட்கிறார்: (மாற்கு 10:47) பார்வையற்ற பர்த்திமேயுவின் கூக்குரலை கேட்டு “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” பார்வை தருகிறார் இயேசு. தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டவர்களையும் அரவணைக்கிறார்: (மாற்கு1:40-42) நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்ற தொழுநோயாளர்மீது இயேசு பரிவுகொண்டு அவரைத் தொட்டு நலப்படுத்துகிறார். (லூக்.17:11-19) இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண்டிருந்தபோது பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்! அவர்களைக் குணப்படுத்துகிறார் இயேசு! (மத்.14:13-20) இயேசு பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்; அவர்களுக்கு உணவு அளித்தார்!

இயேசுவின் இதயம் கேட்கின்ற இதயம்!

மக்களின் தேவைகளை அறிந்து அவர்களின் கூக்குரலை கேட்டு அவர்களை பலப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் இதயம் கொண்டவராய் இருக்கின்றார்! ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணுக்குத் தெரியாத இந்த தொற்று நோய் (கொரோனா) காலத்தில் தங்கள் ஊருக்கு நடந்து சென்றார்கள்! பசியால் வாடினார்கள்; மடிந்தும் போனார்கள்! நமது இதயம் அவர்களைத் தேடி, அவர்களின் பசியைப்போக்க ஓடவில்லையே! ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது இயேசுவின் திருஇதயம்!

நமது ஊரில் அடுத்து இருப்பவர் பசியால் வாடும்போது நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொள்ள, அவர்களின் கூக்குரலை கேட்க அழைப்பு விடுக்கிறது இயேசுவின் இதயம்.

இயேசுவின் இதயம் கொடுக்கின்ற இதயம்:

தனது பயணத்தில் பிறரின் தேவையை கேட்காமலே அறிந்து கொடுக்கின்ற தேவன் இயேசு இருக்கின்றார்! (லூக்.7:11-15) - நயீன் ஊர்க் கைம்பெண்மீது பரிவுகொண்டு இறந்தமகன் உயிர்பெற செய்கிறார்! யோவான்(5:5-9) முப்பத்தெட்டு ஆண்டுகளாய் பெத்சதா குளம் அருகில் உடல்நலமற்றிருந்த ஒருவரைக் கண்டு இயேசு குணப்படுத்துகிறார். இயேசுவின் பார்வை எப்போதும் பிறர் நலத்தில் இருந்தது. எப்படி இயேசுவால் பிறர் தேவையை உணர முடிந்தது? எல்லா நேரமும் பிறர் நலம் மட்டும் நாடி பணி செய்ய எப்படி முடிந்தது? ஏனெனில் இயேசு எல்லாரையும் விண்ணக தந்தையின் மக்களாக பார்த்தார். அதனால் தான் மத்தேயு நற்செய்தியில் (5:44-45) இயேசு தம் சீடர்களுக்கு கூறுகிறார்: “உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்” கடவுளின் பார்வையில் நாம் அனைவரும் அவரின் மக்கள்!

இயேசுவின் திரு இருதய பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவின் திருஇருதய மன்றாட்டு மாலை, செபங்கள் செய்வதுமட்டும் போதாது! பிறர் தேவையை நமது பார்வையில் கொண்டிருக்க வேண்டும். தேடிவரும் மக்களின் தேவைகளைக்கண்டு உணர்ந்து பூர்த்தி செய்யவேண்டும்! இயேசுவின் திருஇருதயம் இதற்கு தான் நம்மை அழைப்பு விடுக்கிறது! இயேசுவின் கிறிஸ்துவின் மனநிலை கொண்டுள்ள நாமும் கனிவும் மனத்தாழ்மையும் உடையவர்களாய், பிறருக்கு இளைப்பாறுதல் தரும் இதயம் கொண்டவர்களாய் இருக்க; நமது தேவைகளை மட்டுமல்ல, பிறர் தேவைகளுக்குத் தேட அழைக்கப்பட்டிருக்கிறோம்! பிறர் பணியில் நம்மை அர்ப்பணிக்க இறைவன் நமக்கு அருள் தருவாராக!

நேர்காணல்: இயேசுவின் தூய்மைமிகு இதயத்தின் சிறப்புகள்
25 June 2020, 12:02