தேடுதல்

Vatican News
ஆப்ரிக்க ஆயர்கள் ஆப்ரிக்க ஆயர்கள்  (AFP or licensors)

ஆப்ரிக்க வளங்களைச் சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களின் உதவிக்கு...

ஆப்ரிக்க மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்கென, ஒருமைப்பாட்டு நிதி என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு, ஆப்ரிக்க ஒன்றியம், தன் உறுப்பு நாடுகளை வலியுறுத்துமாறு SECAM அழைப்பு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 கொள்ளைநோய் ஏற்படுத்தியுள்ள கடுமையான விளைவுகள், வறுமைக்கோட்டிற்குகீழ் வாழ்கின்ற மக்களை பெருமளவில் பாதித்துள்ளன என்பதை எவ்வித சந்தேகமுமின்றி அறிவிக்கலாம் என்று, ஆப்ரிக்கா மற்றும், மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (SECAM) கூறியுள்ளது.

SECAM எனப்படும், இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் தற்போது எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு, சுற்றுலாக்கள், விமானப்போக்குவரத்து, முக்கிய உற்பத்தி துறைகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதும், சுற்றுலா பயணியர் விடுதிகள் மூடப்பட்டிருப்பதும் முக்கிய காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய கொள்ளைநோய் பரவலால் பல நாடுகள், பொருளாதார அளவில் துன்புறும்வேளை, ஏற்கனவே வெளிநாட்டுக்கடன் சுமையால் துன்புறும் ஆப்ரிக்க நாடுகளில், வேலைவாய்ப்பின்மையும், ஏழ்மைநிலையும், தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று, ஆப்ரிக்க ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்க வளங்களை பெருமளவில் சுரண்டும், பெரிய பன்னாட்டு நிறுவனங்கள்,  இப்போதைய நெருக்கடி காலத்தில், ஆப்ரிக்காவின் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு அதிக அளவில் உதவுமாறு, ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொழிலில் முன்னேறிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான மூலப்பொருள்களை அதிக அளவில் விநியோகிப்பது ஆப்ரிக்க நாடுகளே என்றும், தங்கள் தொழிற்சாலைகளுக்கு பொருள்களைக் கொடுத்து உதவும் ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவவேண்டியது, அந்த நிறுவனங்களின் கடமை என்றும், ஆயர்கள் கூறியுள்ளனர்.

வளர்ந்த நாடுகளில், கோவிட்-19 கொள்ளைநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் போட்டிகள் நிலவும்வேளை, வர்த்தக அமைப்புகளும், மருந்து நிறுவனங்களும், இந்தச் சூழலை, இலாபம் தேடுவதற்குப் பயன்படுத்தாமல், சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற மக்களைப் பராமரிக்கும் முயற்சிகளில் இணையுமாறு, ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். (Fides)

05 June 2020, 12:44